ரஷ்யாவில் வைத்து கைது செய்யப்பட்ட ‘ரொட்டும்ப அமில’ நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்
முன்னதாக 2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 7 ஆம் திகதி டுபாய்க்குத் தப்பிச் சென்றிருந்த இவர், 2019 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் திகதி டுபாயில் நடைபெற்ற மாகந்துர மதுஷின் பிறந்தநாள் களியாட்ட நிகழ்வின் போது ஐக்கிய அரபு அமீரகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, ‘கஞ்சிப்பானை இம்ரானுடன்’ இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.
ரஷ்யாவில் வைத்து கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர் என அறியப்படும் ‘ரொட்டும்ப அமில’ எனும் அமில சம்பத் சேபால ரத்நாயக்க, 20-11-2026 அன்று நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, அவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்திருந்த குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், மேலதிக விசாரணைக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கொண்டுசென்றிருந்தனர்.
ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலிருந்து நேற்று (20) அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட 44 வயதுடைய மாத்தறை - ஊருபொக்க, ரொட்டும்ப பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபரிடம், விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் ஆரம்பகட்ட வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர் கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களத் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு இடம்பெற்ற பல்வேறு மனிதப் படுகொலைகள், கப்பம் கோருதல் மற்றும் பாரியளவிலான சர்வதேச போதைப்பொருள் கடத்தல்கள் உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபராக ரொட்டும்ப அமில தேடப்பட்டு வந்தார். பாதாள உலகத் தலைவர்களான ‘அங்கொட லொக்கா’ மற்றும் ‘மாகந்துர மதுஷ்’ ஆகியோருடன் மிக நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்த இவர், 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற ‘கிளப் வசந்த’ படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், 2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 25 ஆம் திகதி ஊருபொக்க பகுதியில் வர்த்தகர் ஒருவரை சுட்டுக் கொலை செய்தமை மற்றும் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி முல்லேரியா பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகொலை உள்ளிட்ட பல கொலைக் குற்றச்சாட்டுகளும் இவருக்கு எதிராகப் பதிவாகியுள்ளன. முன்னதாக 2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 7 ஆம் திகதி டுபாய்க்குத் தப்பிச் சென்றிருந்த இவர், 2019 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் திகதி டுபாயில் நடைபெற்ற மாகந்துர மதுஷின் பிறந்தநாள் களியாட்ட நிகழ்வின் போது ஐக்கிய அரபு அமீரகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, ‘கஞ்சிப்பானை இம்ரானுடன்’ இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.
பின்னர் மாத்தறை குற்றத்தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, 2023 ஆம் ஆண்டு மே 3 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் சட்ட நடவடிக்கைகளைப் புறக்கணித்து ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்தார். இந்நிலையில், பல்வேறு நீதிமன்றங்களால் இவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கு அமைய சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதற்கமைய, 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யப் பாதுகாப்புப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த வருடம் மார்ச் மாத இறுதியில் ரொட்டும்ப அமிலவின் கைது குறித்து ரஷ்யப் பொலிஸாரால் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதையடுத்து, நாடுகடத்தல் சட்டத்தின் கீழ் அவரை இலங்கைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டன.
இதனிடையே, தன்னை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிராக ரஷ்ய நீதிமன்றத்தில் அவர் மேன்முறையீடு செய்திருந்ததாலும், இலங்கைக்கு ஒப்படைக்கப்படுவதைத் தவிர்க்கும் சூட்சும திட்டமாக ரஷ்ய இராணுவ சேவையில் இணைந்து அந்நாட்டுப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பித்திருந்ததாலும் அவரை நாட்டுக்கு அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்று ரஷ்யாவுக்குச் சென்று, அனைத்துச் சட்ட நடவடிக்கைகளையும் பூர்த்தி செய்து நேற்று அவரை நாட்டுக்கு அழைத்து வந்துள்ளது. தொடர்ந்து சந்தேகநபரை 72 மணித்தியாள பதடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதுக்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் சந்தேகநபரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.





