மொன்றியல் பகுதியில் அக்டோபர் மாத வீட்டு விற்பனை 17.7 சதவீதம் சரிவு
தனி வீடுகளின் சராசரி விற்பனை விலை 1.6 சதவீதம் உயர்ந்து 640,000 டாலராக உள்ளது.
கனடாவின் மொன்றியல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அக்டோபர் மாத வீட்டு விற்பனை கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 17.7 சதவீதம் சரிந்துள்ளது. வீடுகளுக்கான தேவை குறைந்து வருவதுடன், விற்பனைக்குக் கிடைக்கும் வீடுகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கியூபெக் மாகாண றியல் எஸ்ரேற் வாரியம் தெரிவித்துள்ளது.
கியூபெக் தொழில்முறை றியல் எஸ்ரேற் தரகர்கள் சங்கத்தின் புள்ளிவிவரங்களின்படி, மொன்றியல் பெருநகரப் பகுதியில் அக்டோபர் மாதத்தில் மொத்தம் 3,252 குடியிருப்புச் சொத்துகள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 3,950 ஆக இருந்தது.
வீட்டு விற்பனையில் ஏற்பட்டுள்ள இந்தக் கடுமையான சரிவு, நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தொடரும் வீழ்ச்சிப் போக்கின் ஒரு பகுதியாகும் என்று அந்த வாரியத்தின் மூத்த பொருளாதார நிபுணர் ஹெலன் பெஜின் தெரிவித்துள்ளார்.
மேலும், வீடுகளின் விலைகள் பெரும்பாலான மக்களின் வாங்கும் திறனுக்கு அப்பாற்பட்ட நிலையில் இருப்பதால், தங்களுடைய பொருளாதார வசதிக்கு ஏற்ப வீடு வாங்கும் முடிவுகளையும் தேர்வுகளையும் வாங்குபவர்கள் மாற்றியமைத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வீடுகளின் விற்பனை விலையில் சிறிய அளவிலான உயர்வு காணப்பட்டுள்ளது. தனி வீடுகளின் சராசரி விற்பனை விலை 1.6 சதவீதம் உயர்ந்து 640,000 டாலராக உள்ளது.
அடுக்குமாடிக் குடியிருப்புகளின் சராசரி விற்பனை விலை 0.3 சதவீதம் உயர்ந்து 430,500 டாலராக உள்ளது. பல குடியிருப்புகளைக் கொண்ட கட்டடங்களின் சராசரி விற்பனை விலை எந்த மாற்றமும் இன்றி 850,000 டாலராக நீடிக்கிறது.
மொன்றியல் பகுதியில் அக்டோபர் மாதத்தில் புதிதாக விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 6,247 ஆக இருந்தது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.7 சதவீதம் குறைவாகும்.
அதே நேரத்தில், விற்பனைக்காகச் சந்தையில் உள்ள மொத்த வீடுகளின் எண்ணிக்கை 18.2 சதவீதம் அதிகரித்து 21,817 ஆக உயர்ந்துள்ளது.





