தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ. 5.25 கோடி நிவாரணம்
ஏற்கெனவே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 5 லட்சமும் இழப்பீடாக வழங்கப்பட்டிருந்தது.
2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கும், காயமடைந்த 40 பேருக்கும் கூடுதலாக ரூ. 5.25 கோடி நிவாரணம் வழங்கத் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் காப்பர் ஆலை ஏற்படுத்திய சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது. ஆலையின் விரிவாக்கத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்தது.
ஏற்கெனவே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 5 லட்சமும் இழப்பீடாக வழங்கப்பட்டிருந்தது. தற்போது, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கூடுதலாக தலா ரூ. 25 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு கூடுதலாகத் தலா ரூ. 5 லட்சமும் வழங்கப்பட உள்ளது.
ஆலையை மூடக் கோரி நடைபெற்ற போராட்டங்களின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.





