எதிர்க்கட்சியின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு கண்டனம் - தமிழரசுக்கட்சி
இந்த இரண்டு கட்சிகளும் எந்த எல்லைக்கும் சென்று செயற்படுவார்கள் என்பது நாட்டின் வரலாற்றில் தொடர்ந்து பதிவாகிவரும் ஒரு விடயமாகும்.
சர்ச்சைக்குரிய ஞானசார தேரர் விவகாரத்தை அரசாங்கத்துக்கு எதிராகத் திருப்புவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான உறுப்பினர்கள் மல்வத்துபீட மகாநாயக்க தேரரிடம் சென்று சிறுபான்மையின மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகவே அரசாங்கம் இதனைச் செய்கிறது எனக் கூறியது மிகமோசமான சந்தர்ப்பவாத அரசியலாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், அதனை தாம் வன்மையாக கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கலகொட அத்தே ஞானசார தேரருடன் தொடர்புடைய வகையில் எழுந்திருக்கும் சர்ச்சையை அடுத்து மல்வத்துபீட மகாநாயக்க தேரரை நேரில் சென்று சந்தித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் லக்ஷ்மன் கிரியெல்ல உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், ஞானசார தேரர் விவகாரத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறுபான்மையின மக்களைத் திருப்திப்படுத்துவதற்கு முயற்சிப்பதாக வெளியிட்ட கருத்து சிறுபான்மையின மக்கள் மற்றும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது.
இந்நிலையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த சந்தர்ப்பவாத அரசியலை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், 'மல்வத்துபீட மகாநாயக்க தேரருடனான சந்திப்பின்போது ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வெளியிட்ட கருத்து, அவர்களும் சந்தர்ப்பவாத அரசியலைத் தொடர்ந்து பின்பற்றுகிறார்கள் என்பதையே காண்பிக்கின்றது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தனிச்சிங்களச் சட்டத்தை கொண்டுவந்த போதிலும், அதற்கு முன்பதாகவே தனிச்சிங்களச் சட்டம் அமல்படுத்தப்படவேண்டும் என்ற தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சியும் எடுத்திருந்தது. எனவே தாம் ஆட்சிபீடத்தில் ஏறுவதற்கும், யாரையேனும் ஆட்சிபீடத்தில் இருந்து அகற்றுவதற்கும் இந்த இரண்டு கட்சிகளும் எந்த எல்லைக்கும் சென்று செயற்படுவார்கள் என்பது நாட்டின் வரலாற்றில் தொடர்ந்து பதிவாகிவரும் ஒரு விடயமாகும். அதனை தற்போதைய சம்பவம் மேலும் தெளிவாகப் புலப்படுத்துகின்றது. இந்தச் சம்பவத்தினால் நாங்கள் ஏமாற்றமடையவில்லை. ஏனெனில் இவ்வாறான சம்பவங்கள் வழமையாகவே இடம்பெற்று வந்திருக்கின்றன' எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், 'ஆரம்பத்தில் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியபோதே, அதனை நாங்கள் எதிர்த்தோம். ஏனெனில் அவர் எப்போதோ சட்டத்தின் ஊடாக தண்டிக்கப்பட்டிருக்கவேண்டிய ஒருவர். அவர் நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மையாக உள்ள மக்களுக்கு எதிராக அப்பட்டமான இனவாதத்தைத் தூண்டிய ஒரு நபர். அவ்வேளையில் பௌத்த உயர்பீடங்கள் அவருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுத்திருக்கவில்லை. அதனைத்தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு உரிய முறையில் வழங்கப்படவில்லை என நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டதன் பின்னரேயே, தற்போது அவரது உடையைப் பற்றிய சர்ச்சையும், அதன் நீட்சியாக அவரை விடுவிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது' என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும், 'கைதிகள் சிறையில் இருந்து வெளியே செல்லும்போது சிறை உடை அணிவதில்லை. வேறு உடை தான் அணிவார்கள். எனவே இங்கு ஞானசார தேரர் என்ன உடை அணியவேண்டும் என்பது பற்றி நாங்கள் எதனையும் கூறவிரும்பவில்லை. ஆனால் சிறையிலிருந்து வெளியே செல்லும்போது, பௌத்த பிக்குகளுக்கு உரிய ஆடையை அணிந்துசென்று, பௌத்த பிக்குகளும் சிறையில் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்த விரும்பினால் நாம் அதற்குத் தடையாக இருக்கப்போவதில்லை. ஆனால் அந்த உடையை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட ஒரு போராட்டம், இப்போது அவரை விடுதலை செய்யக் கோருவதாக மாறியிருக்கிறது' எனவும் சுமந்திரன் எடுத்துரைத்தார்.
அதேபோன்று 'இந்த விவகாரத்தை அரசாங்கத்துக்கு எதிராகத் திருப்புவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான உறுப்பினர்கள் மல்வத்துபீட மகாநாயக்க தேரரிடம் சென்று சிறுபான்மையின மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகவே அரசாங்கம் இதனைச் செய்கிறது எனக் கூறியது மிகமோசமான சந்தர்ப்பவாத அரசியலாகும். அதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்' என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை இச்சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், கடந்த ஜனாதிபதித்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸவுக்கு தமிழரசுக்கட்சி ஆதரவு அளித்தமையையிட்டு வருந்துகிறீர்களா என வினவியபோது, 'இல்லை' எனப் பதிலளித்த சுமந்திரன், 'ஒவ்வொரு தேர்தலின்போதும் அவ்வப்போதைய அரசியல் சூழ்நிலையின் அடிப்படையில் எந்தத் தரப்பை ஆதரிப்பது என்பது குறித்து நாங்கள் தீர்மானங்களை மேற்கொண்டிருக்கிறோம். ஆனால் அவ்வாறு தேர்தலின்போது வழங்கும் ஆதரவு அந்தக் கட்சிகளுக்காக நாங்கள் வழங்கும் நிரந்தர ஆதரவு அல்ல' என விளக்கமளித்தார்.





