கல்முனை, சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு
குறித்த இரு உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயப் பணிகள் இதுவரை நிறைவுபெறவில்லை.
கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை ஆகிய உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணய நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னரே, தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை ஆகிய உள்ளுராட்சி மன்றங்களின் நிர்வாகச் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையிலேயே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த இரு உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயப் பணிகள் இதுவரை நிறைவுபெறவில்லை. மாநகர சபைகள் கட்டளைச் சட்டம் மற்றும் நகர சபைகள் கட்டளைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சரினால் கடந்த ஒக்டோபர் 13ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை ஆகியவற்றின் செயற்பாடுகள் 2027 மார்ச் மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குறித்த இரு உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு முன்னதாக, எல்லை நிர்ணயப் பணிகள் முழுமையாக நிறைவுசெய்யப்பட்டு, தேர்தல் வட்டாரங்கள் உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்பணிகளை முன்னெடுப்பதற்காக தேசிய மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் இரண்டு எல்லை நிர்ணயக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அக்குழுக்களின் இறுதி அறிக்கைகளின் அடிப்படையிலேயே தேர்தல் வட்டாரங்கள் அறிவிக்கப்படவுள்ளன. தேர்தல் வட்டாரங்களை ஸ்தாபிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதன் பின்னரே, கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை ஆகியவற்றுக்கான வேட்புமனுக்களைக் கோரும் திகதி அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





