கேரளத்தில் பறவை காய்ச்சல்: ஆலப்புழாவில் 18,620 பறவைகள் அழிப்பு
7,116 கோழிகள், 11,057 வாத்துகள் மற்றும் 447 காடைகள் என மொத்தம் 18,620 பறவைகள் அழிக்கப்பட்டன. மேலும், சுமார் 100 கிலோ கோழித் தீவனமும் அழிக்கப்பட்டது.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள இரண்டு கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புதன்கிழமை 18,620 பறவைகள் அழிக்கப்பட்டன. மேலும், 28,040 முட்டைகளும் அழிக்கப்பட்டதாக செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது.
தொற்று மற்ற பகுதிகளுக்குப் பரவுவதை தடுக்கும் வகையில், பாதிக்கப்பட்ட பண்ணைகளைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் உள்ள பகுதிகளில் பறவைகளை அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அம்பலப்புழா வடக்கு, அம்பலப்புழா தெற்கு மற்றும் சென்னித்தலா-திருப்பெருந்துறை ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 7,116 கோழிகள், 11,057 வாத்துகள் மற்றும் 447 காடைகள் என மொத்தம் 18,620 பறவைகள் அழிக்கப்பட்டன. மேலும், சுமார் 100 கிலோ கோழித் தீவனமும் அழிக்கப்பட்டது.
அழிக்கப்பட்ட பறவைகளில் 7,331 பறவைகள் அம்பலப்புழா வடக்கில் பாதிக்கப்பட்ட பண்ணையைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவை. சென்னித்தலா-திருப்பெருந்துறை பகுதியில் 11,289 பறவைகள் அழிக்கப்பட்டன. அம்பலப்புழா தெற்குப் பகுதியில் மேலும் 20 பறவைகள் அழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





