ஜப்பான் தூதுவருடன் மனோ கணேசன் எம்.பி சந்திப்பு
பின்தங்கிய நிலையில் உள்ள மலையக மக்களுக்கான உதவிகள் அவர்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தற்போதைய அரசாங்கம் பல விடயங்கள் பற்றி பேசினாலும் அவை இன்னமும் செயல்வடிவம் பெறவில்லை என்று ஜப்பானிய தூதுவரிடத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் பின்தங்கிய நிலையில் உள்ள மலையக மக்களுக்கான உதவிகள் அவர்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவர் இல்லத்தில், இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமடாவுக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று 12-03-2026 அன்று நடைபெற்றது. இந்தச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன், பாரத் அருள்சாமி மற்றும் பிரஜீவன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது ஜப்பானிய தூதுக்குழுவினரின் சிறப்பான வரவேற்பிற்கு நாட்டு மக்கள் சார்பாக நன்றி தெரிவித்த மனோ கணேசன், இந்நாட்டில் வாழும் சுமார் 15 இலட்சம் இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சமூக மற்றும் பொருளாதார சவால்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், இலங்கையின் வரலாற்றில் நீண்டகாலமாக மிக அதிகளவில் உதவி வரும் ஒரு நட்பு நாடாக ஜப்பான் திகழ்கிறது. அந்த உதவிகள் இந்நாட்டின் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் மலையகத் தமிழ் மக்களைச் சென்றடைகின்றனவா என்பதை ஜப்பான் அரசு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக, பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஜப்பான் அரசு இனி வரும் காலங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தோட்டங்கள் மற்றும் பின்தங்கிய கிராமங்களில் வாழும் மக்களுக்கு நேரடியாகப் பயன்னளிக்கும் வகையிலான திட்டங்களைத் தீர்மானித்துச் செயற்படுத்துமாறு நாம் கோருகிறோம்.
எமது மக்களை ஒரு இலங்கை தேசிய இனமாக அடையாளங்காணுங்கள். நாம் இங்கே பல்வேறு துறைகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறோம். தற்போதைய அரசாங்கம் பல விடயங்களைப் பேசுகிறது, ஆனால் அவை இன்னும் செயல் வடிவம் பெறவில்லை என்றார்.





