வருண ஜயசுந்தரவை கைது செய்ய தற்போது தீர்மானமில்லை - சட்டமா அதிபர் அறிவிப்பு
நீதியரசர் ஆதித்ய படபெந்திகே பிரதி சொலிசிட்டர் ஜெனரலிடம் , மனுதாரர் தரப்பு சட்டத்தரணி குறிப்பிடும் சம்பவம் தொடர்பில் சாட்சியங்கள் ஏதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதா என வினவினார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைய, இதுவரை தெரியவந்துள்ள தகவல்களி்ன் அடிப்படையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வருன ஜயசுந்தரவை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யவோ அல்லது தடுத்து வைப்பதற்கோ எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என சட்டஸமா அதிபர் 12-06-2026அன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தார்.
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுதாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, எவ்வித நியாயமான காரணங்களும் இன்றி தான் கைது செய்யப்படுவதைத் தடுத்து உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு நேற்றைய தினம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமதா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹெரத் இதனைத் தெரிவித்தார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஷசி மகேந்திரன் மற்றும் ஆதித்ய படபெந்திகே ஆகியோரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் நேற்றைய தினம் இந்த ரிட் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மனுவில் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் இதனை தெரிவித்திருந்தார்.
அதற்கமைய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து புதிய கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த விசாரணைகளில் மனுதாரரான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு எதிராக இதுவரை எந்தவொரு விடயமும் வெளிப்படவில்லை. மனுதாரரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவோ அல்லது தடுத்து வைப்பதற்கோ விசாரணைகளின் அடிப்படையில் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் இதன்போது தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மனுதாரர் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணி சுரேன் ஞானராஜ், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணை தொடர்பான சாட்சியாளர் ஒருவருக்கு அழுத்தம் கொடுத்ததாகக் குற்றம் சுமத்தி, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் அண்மையில் நீதிவான் நீதிமன்றில் தனது சேவைபெருநருக்கு எதிரான சாட்ச்சியங்களை முன்வைத்திருந்ததாகக சுட்டிக்காட்டினார்.
அச்சமயத்தில் நீதியரசர் ஆதித்ய படபெந்திகே பிரதி சொலிசிட்டர் ஜெனரலிடம் , மனுதாரர் தரப்பு சட்டத்தரணி குறிப்பிடும் சம்பவம் தொடர்பில் சாட்சியங்கள் ஏதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதா என வினவினார். அதற்கு பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், விசாரணைகளில் அவ்வாறு சாட்சியங்கள் எதுவும் இதுவரை வெளிப்படவில்லை என்றும், இவ்விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதன்போது மனுதாரர் தரப்பு சட்டத்தரணி, நம்பகமான சான்றுகள் இன்றி எவ்வாறு இத்தகைய விடயங்களை முன்வைக்க முடியும் எனக் கேள்வி எழுப்பியதுடன், தனது சேவைபெருனருக்கு இடமாற்றம் ஒன்றினை வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றார். மேலும் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதனால் மனுதாரரான பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு பொருத்தமான இடமாற்றம் ஒன்றை வழங்குவது உகந்தது என நீதிபதிகள் அமர்வு இதன்போது சுட்டிக்காட்டியிருந்தது.
அதற்கமைய, மனுதாரரான பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு பணிஇடமாற்றம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபருடன் கலந்துரையாடி, எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றத்துக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதிகள் அமர்வும் பிரதி சொலிசிட்டர் ஜெனரலுக்கு பணிப்புரை விடுத்தது.





