தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை நோக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை: சிறிதரன் எம்.பி
குறித்த ஒரு நாள் விவாதத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட மனித புதைகுழிகளுக்கான சர்வதேச விசாரணை, காணிகள் அபகரிப்பு உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தவுள்ளோம்.

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யும் மனநிலையில் அரசாங்கம் இல்லையென இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் 08-08-2025 அன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பாராளுமன்றத்தில் அரசியல்கைதிகள் விடுதலை தொடர்பில் நீதி அமைச்சர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
கடந்த மாதம் 23 ஆம் திகதி பாராளுமன்ற குழுத்தலைவர் என்ற ரீதியில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும் சபாநாயகருக்கும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் நிலஅபகரிப்பு, மனித புதைகுழிகள் தொடர்பான விடயங்கள் பேசுவதற்கான கோரிக்கையை முன்வைத்திருந்தேன். அதற்காக சந்தர்ப்பம் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கிடைத்துள்ளது.
குறித்த ஒரு நாள் விவாதத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட மனித புதைகுழிகளுக்கான சர்வதேச விசாரணை, காணிகள் அபகரிப்பு உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தவுள்ளோம்.
எவ்வாறாயினும், அரசியல் கைதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையிலான பொதுமன்னிப்பு மற்றும் விடுதலை சம்பந்தமாக கேள்விகளை எழுப்பிய போது அதற்கு அரசாங்கத்திடமிருந்து உருப்படியான பதில்கள் கிடைத்திருக்கவில்லை. இந்நிலையில் நாம் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.