தீர்வை வரி குறைப்புக்கான நிபந்தனைகள் என்ன?: ஐ.தே.க.கேள்வி
ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்த வரி அதிகரிப்பில் திருத்தம் மேற்கொண்டு, தற்போது ஒவ்வாெரு நாட்டுக்கும் அதிகரிக்கப்பட்ட வரி தொகையை குறிப்பிட்டு கடிதம் அனுப்பி வருகிறார்.

அமெரிக்க ஜனாதிபதியினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த பரஸ்பர தீர்வை வரி ஓரளவேனும் குறைக்கப்பட்டிருப்பது தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன். அதேநேரம் வரியை குறைக்காமல் இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை. வரி குறைக்கப்பட்டுள்ளபோதும் அதற்கான நிபந்தனைகள் என்ன என்பது தொடர்பில் இதுவரை வெளியாகவில்லையென ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தனது நாட்டுக்கு இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான தீர்வை வரியை அதிகரிப்பதற்கு எடுத்த தீர்மானம், பொதுவாக அனைத்து நாடுகளுக்கும் பாரியதொரு பாதிப்பாகும் குறிப்பாக எம்மைப்போன்ற சிறிய நாடுகளுக்கு தாங்கிக்கொள்ள முடியாத ஒரு விடயமாகும். என்றாலும் ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்த வரி அதிகரிப்பில் திருத்தம் மேற்கொண்டு, தற்போது ஒவ்வாெரு நாட்டுக்கும் அதிகரிக்கப்பட்ட வரி தொகையை குறிப்பிட்டு கடிதம் அனுப்பி வருகிறார். அதன் பிரகாரம் இலங்கைக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த 44வீத தீர்வை வரி, 30வீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது.
நாடு என்றவகையில் ஏற்கனவே இருந்த தொகையைவிட தற்போது ஓரளவேனும் குறைக்கப்பட்டிருப்பது தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் எமது நாட்டின் தேயிலையில் நூற்றுக்கு 20 வீதம் வரை அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்கிறோம். அதேபோன்று எமது நாட்டின் ஆடை உற்பத்தியில் அதிக வீதம் அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்கிறோம். அதேநேரம் இந்த வரி குறைப்புடன் இருக்கும் நிபந்தனைகள் என்ன என்பது தொடர்பில் எங்களுக்கு தெரியாது. அது இன்னும் வெளியாகவில்லை.
அத்துடன் அன்று இந்த நாடு வங்குராேத்து அடைந்தது. வங்குராேத்து அடைந்த நாட்டை ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்று, இருந்த கடன்கள் தொடர்பில் அவர் மறுசீரமைப்பு நடவடிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார். அதனை தொடர்ந்து முன்வைத்தபோது அதனை ஏற்றுக்கொண்டார்கள். அதனால் நாட்டின் நிதி நடவடிக்கைகளை முறையாக பேணி வந்ததால் எங்களுக்கு இந்த வரியை குறைத்து வழங்காமல் இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை. என்றாலும் இது ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகம் எடுத்த தீர்மானமாகும் என்றாலும் இன்னும் பல நாடுகளுக்கு இந்த அறிவிப்பு விடுக்கப்படவில்லை. அதனால் ஏனைய நாடுகளுக்கும் இந்த வரி அதிகரிப்பு வழங்கப்பட்ட பின்னரே இதுதொடர்பில் சரியான ஒரு கருத்தை தெரிவிக்க முடியும். இருந்தபோதும் தற்போது எமக்கு வரி குறைக்கப்பட்டிருப்பது தொடர்பில் மகிழ்ச்சியடை முடியும் என்றார்.