போதைப்பொருள் விசேட சுற்றிவளைப்புகளில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் கைது
302 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் 104 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 2641 கிலோ கேரள கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதற்கமைய 35442 வழக்குகள் பொலிஸாரால் தொடுக்கப்பட்டுள்ளன.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் போதைப்பொருள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளாரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான உதயகுமார வுட்லர் தெரிவித்தார்.
கொழும்பில் 14-07-2025 அன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த மூன்று மாதங்களில் போதைப்பொருள் தொடர்பில் பொலிஸார் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் 302 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் 104 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 2641 கிலோ கேரள கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதற்கமைய 35442 வழக்குகள் பொலிஸாரால் தொடுக்கப்பட்டுள்ளன.
இதனை விட இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் 922 கிலோ ஹெரோயின் போதைப்பொருள், 1386 கிலோ ஐஸ் போதைப்பொருள், 10,895 கிலோ கேரள கஞ்சா, 22 கிலோ கொக்கைன் போதைப்பொருள், 329 ஹேஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு இலட்சத்து 6 ஆயிரம் பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.