இலங்கைக்கு அமெரிக்க சந்தையில் பாரிய போட்டி: திஸ்ஸ அத்தநாயக்க
மக்கள் வி;டுதலை முன்னணி தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற நாமத்தில் வலம் வந்து கொண்டிருந்தாலும், அன்று அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் எமக்கு அமெரிக்க சந்தையில் பாரிய போட்டி நிலைமை ஏற்படும். எனவே இதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கான இராஜதந்திர அணுகுமுறைகளை அரசாங்கம் துரிதமாக ஆரம்பிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரி ஆடை இறக்குமதி 30 சதவீதத்துக்கு மாத்திரம் வரையறுக்கப்பட மாட்டாது. அமெரிக்காவுக்கே அதிகளவான ஆடை ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவே தீர்வை வரியை மேலும் குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் எமக்கு அமெரிக்க சந்தையில் பாரிய போட்டி நிலைமை ஏற்படும்.
பிரித்தானியா இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு அரசாங்கம் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். எவ்வாறு இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இலங்கைக்கு மாத்திரமின்றி தென்னாசிய நாடுகள் பலவற்றுக்கும் பிரித்தானியா இந்த வாய்ப்பினை வழங்கியிருக்கிறது.
அவ்வாறெனில் இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் போன்ற ஏனைய நாடுகளுடனும் போட்டித்தன்மையை எதிர்கொள்ள நேரிடும். எனவே ஏற்றுமதி சந்தைகளை மேலும் விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதோடு, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளையும் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும். பொருளாதார நெருக்கடிகளில் சிக்கிக் கொள்ளாது நாட்டைப் பாதுகாப்பதற்கு பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற ரீதியில் அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு நாம் தயாராகவுள்ளோம்.
மக்கள் வி;டுதலை முன்னணி தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற நாமத்தில் வலம் வந்து கொண்டிருந்தாலும், அன்று அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. அது மாத்திரமின்றி வன்முறைகளிலும் ஈடுபட்டிருக்கிறது. ஆனால் நாம் ஒருபோதும் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடப் போவதில்லை. அன்று எதிர்க்கட்சியாக ஜே.வி.பி. செயற்பட்ட விதத்துக்கும், இன்று எதிர்க்கட்சியாக நாம் செயற்படும் விதத்துக்கும் இடையிலான வேறுபாட்டை தற்போது மக்களால் உணரக் கூடியதாக இருக்கும் என்றார்.