அரசியல் தலையீட்டுடன் கொள்கலன்கள் விடுவிக்கப்படவில்லை: பிரதி அமைச்சர் அனில் ஜயந்த
அரசியல் தலையீட்டுடன் இந்த கொள்கலன்கள் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது.

அரசியல் தலையீட்டுடன் 323 கொள்கலன்கள் விடுவிக்கப்படவில்லை. ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை வெகுவிரைவில் சபைக்கு சமர்ப்பிப்போம் சமூக வலைத்தளங்களில் பரிமாற்றப்படும் அறிக்கையையே எதிர்க்கட்சியின் உறுப்பினர் சபைக்கு சமர்ப்பித்தார் என பொருளாதார அபிவிருத்தி திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமர்வின் போது 323 கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த ஜனவரி மாதம் சுங்கத்தில் இருந்து கொள்கலன்களை விடுவிக்கும் போது ஏற்பட்ட நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கு சுங்கத் திணைக்களத்துக்கு தேவையான வசதிகள் நிதியமைச்சினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.சுயாதீனமான முறையில் தீர்மானங்கள் எடுப்பதற்கு முழுமையான அதிகாரமளிக்கப்பட்டது.
இவ்வாறான பின்னணியில் பரிசோதனைகள் ஏதுமின்றி சுங்கத்தில் இருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினார்கள். இவ்விடயத்தின் உண்மையை ஆராய்வதற்கு 2025.01.30 ஆம் திகதியன்று ஜனாதிபதியின் பணிப்புக்கு அமைய நிதியமைச்சின் செயலாளர் ஐந்து உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் குழு ஒன்றை நியமித்தார்.
அரசியல் தலையீட்டுடன் இந்த கொள்கலன்கள் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. இந்த கொள்கலன்கள் விடுவிப்பில் ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றிருக்குமாயின் அதற்குரிய நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்வோம்.
ஜனாதிபதியின் செயலாளரால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பாராளுமன்றத்துக்கு வெகுவிரைவில் சமர்ப்பிப்போம். சமூக வலைத்தளங்களில் பரிமாற்றப்படும் அறிக்கையின் பதிப்பினையே எதிர்க்கட்சியின் உறுப்பினர் சபைக்கு சமர்ப்பித்தார் என்றார்.