ஜனாதிபதிகளின் உரித்து (இரத்துச் செய்தல்) சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணல்ல: உயர்நீதிமன்றம் அறிவிப்பு
ஜனாதிபதிகளின் உரித்து (இரத்துச் செய்தல்) சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் கிடைக்கப் பெற்றுள்ளது.
ஜனாதிபதிகளின் உரித்து (இரத்துச் செய்தல்) சட்டமூலத்தின் எவ்வித ஏற்பாடுகளும் அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு முரணானதல்ல என உயர்நீதிமன்றம் வியாக்கியானமளித்துள்ளதுடன் இந்த சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் 09-09-2025 நடைபெற்ற அமர்வின் போது தினப்பணிகள் அறிவிப்பின் போது சபாநாயகர் மேற்கண்டவாறு அறிவித்தார்.அங்கு அவர் மேலும் அறிவித்ததாவது,
ஜனாதிபதிகளின் உரித்து (இரத்துச் செய்தல்) சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் கிடைக்கப் பெற்றுள்ளது.இந்த சட்டமூலத்தின் எவ்வித ஏற்பாடுகளும், அரசியலமைப்புக்கு முரணானதல்ல என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானமளித்துள்ளது.
ஆகவே இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசியலமைப்பின் 121(1) உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைவாக, கட்டாய விதிமுறைகளை பின்பற்றி நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தை தொடர்புப்படுத்த மனுதாரர் தவறியுள்ளதால் இந்த சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட SC/ SD/ 29/ 2025 ஆம் இலக்க மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது என்றார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்தற்கான சட்டமூலம் கடந்த ஜுலை மாதம் 31 ஆம் திகதியன்று வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் பணிப்புக்கமைய இந்த வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
1986 ஆம் ஆண்டு 04 ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரித்து சட்டத்தை இரத்துச் செய்யும் பொருட்டு இச்சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்தச் சட்டமூலம் 2025 ஆம் ஆண்டு ..... இலக்க ஜனாதிபதிகளின் உரித்து (இரத்துச் செய்தல்) சட்டம் என்று அடையாளப்படுத்தப்படும்.
(இதனகத்துப்பின்னர் 'இரத்துச் செய்யப்பட்ட சட்டம்' என்று அடையாளப்படுத்தப்படும்)1986 ஆம் ஆண்டு 4 ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரித்து சட்டம் இந்த சட்டமூலத்தின் ஊடாக இரத்துச் செய்யப்படும்.
இரத்துச் செய்யப்படும் சட்டத்தின் 2 ஆவது பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதிகள் அல்லது முன்னாள் ஜனாதிபதிகளின் விதவையான மனைவியருக்கு வழங்கப்படும் ஏதேனும் வீடு அல்லது செலுத்தப்படும் மாதாந்த கொடுப்பனவு,
இரத்துச் செய்யப்படும் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதிகள் அல்லது முன்னாள் ஜனாதிபதிகளின் விதவையான மனைவியருக்கு செலுத்தப்படும் செயலாளருக்கான மாதாந்த கொடுப்பனவு மற்றும் உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் வேறு சகல வசதிகள் மற்றும், இரத்துச் செய்யப்படும் சட்டத்தின் 4ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய முன்னாள் ஜனாதிபதிகள் அல்லது முன்னாள் ஜனாதிபதிகளின் விதவையான மனைவியருக்கு செலுத்தப்படும் மாதாந்த கொடுப்பனவு என்பன நிறுத்தப்படும்.





