டோஹாவிலிருந்து கட்டுநாயக்க வந்த விமானத்தில் வெடிகுண்டு புரளி
கடந்த 26ஆம் திகதி கண்டி மாவட்ட செயலக வளாகத்தில் குண்டு இருப்பதாகக் கிடைத்த தகவலைப் போன்றே, இதுவும் ஒரு போலியான தகவல் என பொலிஸார் தெரிவித்தனர்.
டோஹாவில் உள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த விமானத்திற்குள் குண்டுகள் இருப்பதாக வந்த மின்னஞ்சலை அடுத்து பயணிகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
டோஹாவிலிருந்து வந்த விமானத்தில் பயணிகளாக மாறுவேடமிட்ட நான்கு பேர் குண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலைக்குத் தயாராகி வருவதாகக் கூறி கிடைக்கப்பெற்ற மின்னஞ்சலை சோதனை செய்தபோது சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை என்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
டோஹாவில் உள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 28-12-2025 அன்று அதிகாலை 1.44 மணியளவில் புறப்பட்டு, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த விமானத்திற்குள் குண்டுகள் இருப்பதைக் குறிக்கும் மின்னஞ்சல் வந்துள்ளது.
நான்கு பயணிகள் குண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலைக்கு தயாராகி வருவதாக விமான நிலையத்தில் உள்ள மின்னணு கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து செய்தி வந்ததை அடுத்து, கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய பின்னர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
245 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் இரண்டு விமானிகளை ஏற்றிய விமானம் தரையிறங்கிய பிறகு விமானப்படையின் வெடிகுண்டுப் பிரிவு சோதனை செய்தது. இதன்போது விமானத்தில் குண்டுகள் அல்லது சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை என்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
பின்னர் இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சாதாரண முனையத்திற்கு கொண்டு வரப்பட்டு, மீண்டும் பிற்பகல் 1.07 மணிக்கு தோஹா நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.
கடந்த 26ஆம் திகதி கண்டி மாவட்ட செயலக வளாகத்தில் குண்டு இருப்பதாகக் கிடைத்த தகவலைப் போன்றே, இதுவும் ஒரு போலியான தகவல் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இரண்டு மின்னஞ்சல்களும் வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறான சீர்குலைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிய குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.





