ஈரானின் மூழ்கிய கப்பலில் இருந்து மனிதாபிமான அடிப்படையில் மீட்பு - வெளிவிவகார அமைச்சர்
நேற்று காலை 06 மணிக்கு முதலாவது மீட்பு குழுவினரும், காலை 7 மணிக்கு இரண்டாவது மீட்பு குழு கப்பலும் அந்த இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கடற்பரப்புக்கு அப்பாற்பட்ட கடற்பரப்பில் மூழ்கும் நிலையில் இருந்த ஈரான் கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இருந்தவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.இவர்களில் 30 பேர் சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.சர்வதேச கடல்சார் சட்டம், கடல்சார் உடன்படிக்கைகள் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் இவர்கள் மீட்கப்பட்டார்கள் என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 04-03-2026 அன்று நடைபெற்ற அமர்வின் போது தெற்கு கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரான் கப்பல் தொடர்பில் அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுக்க வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, இலங்கைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்பில் ஈரான் கடற்படைக்கு சொந்தமான ஐடிஸ் - டேனா என்ற கப்பல் அனர்த்தத்துக்குள்ளாகி மூழ்கும் நிலையில் இருப்பதாக 04-03-2026 அன்று காலை 05.08 மணியளவில் இலங்கை கடற்படைக்கும், சமுத்திர பாதுகாப்பு அதிகார சபைக்கும் தகவல் கிடைக்கப்பெற்றது.
இந்த கப்பல் பற்றி ஆராய்வதற்கு கடற்படை மற்றும் விமான படை கூட்டாக இணைந்து செயற்பட்டுள்ளது. நேற்று காலை 06 மணிக்கு முதலாவது மீட்பு குழுவினரும், காலை 7 மணிக்கு இரண்டாவது மீட்பு குழு கப்பலும் அந்த இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் 180 பேர் இருந்துள்ள நிலையில் அவர்களில் 30 பேர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச கடல்சார் சட்டம், கடல்சார் உடன்படிக்கைகள் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்கள்.கடல்சார் சட்டத்துக்கமைய இலங்கையின் கடற்பரப்பை அண்மித்த பகுதியில் ஏதேனும் கப்பல் விபத்துக்குள்ளானால் ஆரம்பக்கட்ட உதவிகளை வழங்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு என்றார்.





