ஜயகொடியின் இராஜினாமா காலங்கடந்த தீர்மானம் - நாமல் ராஜபக்ஷ
இந்த மோசடி தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்ட பின்னரும் கூட, ஜனாதிபதி தொடர்ந்து ஜயக்கொடியை பாதுகாத்து வந்தார்.
நிலக்கரி கொள்வனவு மோசடி தொடர்பில் குமார ஜயகொடி பதவியில் இருந்து விலகியமையானது காலங்கடந்த தீர்மான மாகுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது: நிலக்கரி கொள்வனவு மோசடி தொடர்பில் பாராளுமன்றத்தில் குமார ஜயகொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு முழுநாளும் விவாதிக்கப்பட்டது.
எனினும், அந்தப் பிரேரணைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாக்களித்திருந்தனர். தற்போது சர்ச்சைக்குரிய நிலக்கரி கொள்வனவு மோசடி தொடர்பில் குமார ஜயகொடி பதவியில் இருந்து விலகியுள்ளார். இது மிகவும் காலங்கடந்த தீர்மானமாகும்.
மக்களின் பல மில்லியன் ரூபா பணத்தை இழக்கச் செய்த ஊழல் குற்றச்சாட்டுகளைப் புறக்கணித்து, அதற்கு ஆதரவாகவே அந்தத் தரப்பினர் செயற்பட்டனர். தற்போது அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதானது நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடுசெய்யப்போவதில்லை. இறுதியில் பாரிய மோசடியின் சுமையை நுகர்வோரே சுமக்க வேண்டியுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகள் நிலவிய ஒருவருக்கு இவ்வளவு சக்திவாய்ந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவியை வழங்கியமைக்கான பொறுப்பை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஏற்பாரா? இந்த மோசடி தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்ட பின்னரும் கூட, ஜனாதிபதி தொடர்ந்து ஜயக்கொடியை பாதுகாத்து வந்தார்.
இந்த நிலக்கரி கொள்வனவு மோசடி அம்பலப்படுத்தப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும், ஜயக்கொடியைபாதுகாத்த ஜனாதிபதி, இதன் ஊடாக நுகர்வோருக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு நேரடியாகப் பொறுப்புக்கூற வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார்.





