பழைய கல்வி முறை ஆற்றல்களை இனங்காண போதுமானதாகவில்லை: பிரதி அமைச்சர் மஹிந்த
தற்போதைய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களின் ஊடாக இந்த நிலைமையை தகுந்த முறையில் சீர்செய்ய முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பழைய கல்வி முறையானது பிள்ளைகளின் உள்ளார்ந்த ஆற்றல்களையும் திறன்களையும் சரியாக இனங்காண்பதற்கு போதுமானதாக அமையவில்லை எனத் தொழில் துறை பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களின் ஊடாக இந்த நிலைமையை தகுந்த முறையில் சீர்செய்ய முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 28-01-2026 அன்று நடைபெற்ற தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்தின் பாடநெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த உயர் டிப்ளோமா மற்றும் டிப்ளோமா தாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், கடந்த ஒரு வருடகாலமாக எமது நாடு ஒரு புதிய பாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. நாட்டின் பௌதீக அபிவிருத்தியைப் போன்றே மனிதவள அபிவிருத்தியும் மிகவும் முக்கியமானது. நவீன உலகத்தை நாம் வெற்றிகொள்ள வேண்டுமாயின் புதிய பாதையில் மனித வளத்தை மேம்படுத்த வேண்டும். அதற்காக புதிய கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.
எந்தவொரு பிள்ளையையும் கைவிடாது அவர்கள் அனைவருக்கும் வெற்றிகரமான தொழில் வாழ்க்கையையும் சமூக வாழ்வையும் உறுதிப்படுத்துவதே இந்த புதிய கல்விச் சீர்திருத்தங்களின் முதன்மை நோக்கம்.
சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சிகளை வழங்குவதில் முன்னோடியாக விளங்கும் தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி திணைக்களம் தற்போது 100-க்கும் மேற்பட்ட பாடநெறிகளை நடத்தி வருகின்றது. இதில் 600-க்கும் மேற்பட்ட துறைசார் நிபுணர்கள் விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகின்றனர் என்றார்.





