திருந்தாத பொலிஸாரின் சீருடை சட்டத்தின் ஊடாக களையப்படும் - ஜனாதிபதி அநுரகுமார
நாட்டு மக்களின் பாதுகாப்புக்காகவும், எதிர்கால தலைமுறைக்காகவும் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.
ஒட்டுமொத்த பொலிஸ் சேவையை அவமதிக்கும் வகையில் ஒருசில பொலிஸார் பாதாளக்குழுக்களின் மீதான அச்சத்தாலும், பணத்தின் மீதான ஆசையாலும் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் அதனுடனான செயற்பாடுகளுக்கு ஒத்தாசை வழங்குகிறார்கள். இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தமது பழைய பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.இல்லையேல் சட்டத்தின் ஊடாக சீருடை களையப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
நாட்டு மக்களின் பாதுகாப்புக்காகவும், எதிர்கால தலைமுறைக்காகவும் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது. மக்களின் நலனுக்காக அரசியலமைப்பிலும் திருத்தங்களை கொண்டு வருவதற்கு தயாராகவுள்ளேன். எதிர்வரும் நாட்களில் அதற்குரிய நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
பொலிஸ் சேவையின் 160 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கொழும்பு பொலிஸ் மைதானத்தில் 03-09-2026அன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு பொலிஸாருக்கு உண்டு.160 வருட காலத்தில் பொலிஸார் நாட்டுக்காக சேவையாற்றியுள்ளார்கள். பலர் நாட்டுக்காக தமது உயிரையும் அர்ப்பணித்துள்ளார்கள்.
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாளக்குழுக்களின் செயற்பாடு சமூகத்தின் கறுப்பு இராச்சியமாகவே காணப்படுகிறது. இந்த இரண்டையும் முற்றாக ஒழிக்க வேண்டும்.இல்லையேல் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது.
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாளக்குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொலிஸார் இவ்விரண்டு காரணிகளுக்கும் இனி முன்னுரிமை வழங்க வேண்டும்.
கடந்த ஆண்டு மாத்திரம் பெருந்தொகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பொலிஸார் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் ஒருசில பொலிஸார் போதைப் பொருள் வர்த்தகத்துக்கு உதவி ஒத்தாசை வழங்குகிறார்கள்.இது வெட்கக்கேடானதொரு செயற்பாடு.
பாதாளக்குழுக்களின் மீதான அச்சத்தால் ஒரு தரப்பினரும், பணத்துக்காக ஒரு தரப்பினரும் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் அதனுடனான செயற்பாடுகளுக்கு ஒத்தாசை வழங்குகிறார்கள். இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தமது பழைய பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.இல்லையேல் சட்டத்தின் ஊடாக சீறுடை களையப்படும்.
பல்வேறு குற்றங்களுடன் ஈடுபட்டு வெளிநாடுகளில் பதுங்கியுள்ளவர்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கை சர்வதேச மட்டத்தில் முன்னெக்கப்படுகிறது. வெகுவிரைவில் நாட்டுக்கு பலர் அழைத்து வரப்படுவார்கள்.
நாட்டு மக்களின் பாதுகாப்புக்காகவும், எதிர்கால தலைமுறைக்காகவும் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது. மக்களின் நலனுக்காக அரசியலமைப்பிலும் திருத்தங்களை கொண்டு வருவதற்கு தயாராகவுள்ளேன். எதிர்வரும் நாட்களில் அதற்குரிய நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்படும். பொலிஸ் சேவையில் பல பிரச்சினைகள் மற்றும் குறைப்பாடுகள் காணப்படுகிறது என்பதை நன்கு அறிவேன். ஆளணி பற்றாக்குறையால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாளொன்றுக்கு பல மணிநேரம் சேவையில் ஈடுபட வேண்டிய நிலை காணப்படுகிறது. ஆகவே பொலிஸ் சேவையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.





