பல்லேகம ஹேமரத்ன தேரர் சிறப்பு வாயில் ஊடாக பிரவேசித்தமை தொடர்பில் விசாரணை
சிறுமியின் தாயாருக்கு எதிராக மனிதக் கடத்தல் மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை மற்றும் கற்பழிப்பு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய அநுராதபுரம் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் நீதிபதிகளுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு வாயில் வழியாக நீதிமன்ற வளாகத்திற்குள் பிரவேசித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அநுராதபுர மேல் நீதிமன்ற நீதிபதி சியபத் சசிது விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் முறைப்பாடளித்த பிமல் ரூஹுனகே சார்பில் ஆஜரான சட்டத்தரணி சாணக்க அபேவிக்ரம சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தின் கவனத்திற்கு பல்வேறு விடயங்களை முன்வைத்து தனது எதிர்ப்பை வெளியிட்டார்.
சாதாரண மக்கள் கடுமையான பொலிஸ் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றத்தின் பிரதான வாயில் வழியாகவே அழைத்துச் செல்லப்படும் நிலையில் சந்தேக நபரான தேரர் எவ்வாறு எந்தவித சோதனையுமின்றி சொகுசு வாகனத்தில் நீதிபதிகள் பயன்படுத்தும் சிறப்பு வாயில் வழியாக நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்தார் என்று கேள்வி எழுப்பினார்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் இவ்வாறான சிறப்பு சலுகை பெறுவதற்கு அவர் யார் நீதிபதியா ? எனக் கேள்வி எழுப்பிய சட்டத்தரணி சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் நடவடிக்கை குறித்து உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இதனை கருத்திற்கொண்ட தலைமை நீதிபதி நீதிமன்ற அமர்வின்போது பொலிஸ் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரியை உடனடியாக திறந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டார். அதன்படி நீதிமன்றத்தில் முன்னிலையான பிரதான பொலிஸ் பரிசோதகரிடம் சந்தேக நபரான தேரர் சிறப்பு வாயில் வழியாக நீதிமன்றத்திற்குள் நுழைந்த விதம் மற்றும் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட முறை தொடர்பில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இதனிடையே பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜரான நிட்டம்புவ தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பி. எம். அனுர குணவர்த்தன வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் சிறப்பு கலந்தாலோசணை நடத்தப்பட்டதாகவும் அதில் புலனாய்வு அதிகாரிகள் பங்கேற்றதாகவும் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
சட்டமா அதிபரின் ஆலோசனைகளைகப் பெற்றுக்கொள்வதற்காக வழக்கு விசாரணையை எதிர்வரும் 2027 ஜனவரி 08 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தiலைமை நீதிபதி தீர்மானித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் மருத்துவப் பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டதுடன் ராகமை போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரிக்கு சம்மன் அனுப்பவும் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது.
தண்டனைச் சட்டக்கோவை திருத்த சட்டத்தின் கீழ் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை மற்றும் கற்பழிப்பு ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சிறுமியின் தாயாருக்கு எதிராக மனிதக் கடத்தல் மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சந்தேகநபரான பல்லேகம ஹேமரத்ன தேரர் தற்போது வெளிநாட்டுப் பயணத்தடை உள்ளிட்ட பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார். விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் அனுராதபுரம் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் உயர் பொலிஸ் அதிகாரிகள் ஆஜராகினர். சந்தேகநபரான பல்லேகம ஹேமரத்ன தேரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான காளிங்க இந்திரதிஸ்ஸ மற்றும் அனுஜ பிரேமரத்ன உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.





