சண்டியர்களாக செயற்பட்டவர்கள் நொண்டியர்களாக மாறிவிட்டனர்: சாமர சம்பத்
மேர்வின்சில்வா ஊடகங்கள் மீது கைவைக்கப்போய் அவருக்கு என்ன நடந்தது என்று தெரியும்தானே?.
எதிர்க்கட்சியில் இருக்கும் போது சண்டியர்களாக செயற்பட்டவர்கள் அரசாங்கத்திற்கு வந்ததும் நொண்டியர்களாக மாறிவிட்டனர்.புதிய கல்வி மறுசீரமைப்பு குளறுபடியில் பிரதமருக்கு தண்டனை வழங்க வேண்டும் அல்லது அவர் பதவி விலக வேண்டும் என என புதிய ஜனநாயக முன்னணி பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 06-01-2026 அன்று நடைபெற்ற கடற்றொழில் மற்றும் நீர்வாழ், உயிரின வளங்கள் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, வெனிசுவேலா பிரச்சினை 2018ஆம் ஆண்டு காலத்தில் ஏற்பட்ட மக்கள் விடுதலை முன்னணியினர் அப்போது அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்னால் சென்று சுற்றிவளைத்தனர். ஆனால் இப்போது அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்னால் சென்று இவர்களின் வேறு தரப்பினரே சுற்றி வளைத்தனர். ஆளும் தரப்பினர் எதிர்க்கட்சியில் இருக்கும் போது சண்டியர்களாகவும் அரசாங்கத்தில் இருக்கும் போது நொண்டியர்களாகவும் உள்ளனர். இவர்களால் இப்போது எதுவும் பேசமுடியாமல் இருக்கின்றனர்.
புதிய கல்வி மறுசீரமைப்பு விடயத்தில் நாங்கள் பிரதமரை அவமதிக்கும் வகையில் எதனையும் கூறப் போவதில்லை. இந்த பிரச்சினையில் தவறு எங்கே நடந்துள்ளது என்பதல்ல. உதாரணத்திற்கு சர்ச்சைக்குரிய மருந்து ஊசிகளை கெஹலிய ரம்புக்வெல்ல காலத்தில் இறக்குமதி செய்திருந்தாலும் அவற்றை நோயாளர்களுக்கு செலுத்தியவர் அவரல்ல. ஆனால் சிறைக்கு அவரே சென்றார். அதேபோன்றுதான் பிரதமருக்கும் இதில் இருந்து பொறுப்புக் கூறுவதில் இருந்து தப்பிக்க முடியாது.
நான் சிறைக்கு சென்ற விடயத்திலும் அதிகாரிகளே வங்கியில் இருந்து பணத்தை பெற்றனர். நானல்ல. இறுதியில் சிறைக்கு சென்றது நானே. அது போன்றுதான் பிரதமருக்கு இதில் இருந்து விலகிச் செல்ல முடியாது. நிச்சயமாக கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் சாமர சம்பத்துக்கு தண்டனை வழங்கப்படுவதை போன்று பிரதமருக்கும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் அவர் பதவி விலக வேண்டும்.
பொலிஸார் பற்றி கூறும் போது முன்னாள் சபாநாயகர் மதுபோதையில் வாகனம் செலுத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரியொருவருக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன் கஞ்சா பிடிக்க சென்ற பொலிஸ் அதிகாரியொருவருக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன.
இதேவேளை இப்போது ஊடக நிறுவனங்கள் மீது கைவைக்க முயற்சிக்கின்றனர். மேர்வின்சில்வா ஊடகங்கள் மீது கைவைக்கப்போய் அவருக்கு என்ன நடந்தது என்று தெரியும்தானே?. அதுபோன்றுதால் இந்த அரசாங்கமும் மரங்கொத்தி பறவை போன்று எல்லா மரத்திலும் கொத்தி வாழைமரத்தில் கொத்தி சிக்கிக்கொண்டது போன்றுதான் ஊடகங்கள் மீது அரசாங்கம் கைவைத்தால் நடக்கும். இதனால் ஊடகத்தின் மீது கைவைப்பதை நிறுத்துமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்கின்றோம்.
மண்சரிவு நிலைமையின் பின்னர் ரயில் சேவைகள் இன்னும் வழமைக்கு திரும்பவில்லை. கொழும்பு யாழ்ப்பாணம், மட்டக்களப்புக்கான புகையிரத சேவைகளுக்கு என்ன நடந்தது?. இன்னும் அதனை வழமைக்கு கொண்டுவர முடியவில்லை. மஹவ வரையிலேயே அந்த சேவை நடக்கின்றது. அதேபோன்று அனர்த்த நிலைமைகளின் பின்னர் மக்களுக்கு வழங்குவதாக கூறப்பட்ட நஷ்ட ஈடுகள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்புகளால் மக்கள் அதனை நம்பி ஏமாற்றமடைந்துள்ளனர். முறையாக இது தொடர்பான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றார்.





