குருக்கள்மடம் மனிதப்புதைகுழி: நிதி ஒதுக்கீட்டு அறிக்கை எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும்
உத்தரவின் பிரகாரம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடந்த வியாழனன்று குருக்கள்மடம் மனிதப்புதைகுழியை நேரடியாகச்சென்று பார்வையிடுவதற்குரிய ஏற்பாடுகள் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்டன.
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளை ஆரம்பிப்பது குறித்து அப்பகுதிக்கு நேரடியாகச்சென்று ஆராய்ந்த அதிகாரிகள் குழுவினரால் தயாரிக்கப்படவுள்ள விசாரணை மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான அறிக்கை எதிர்வரும் 18 ஆம் திகதி களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது.
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி அகழ்வு மற்றும் ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதற்குப் பொறுப்பான விசாரணைக்குழுவினர் அப்பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து ஆராய்வதற்காக கடந்த வியாழக்கிழமை அப்பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
சிரேஷ்ட சட்ட வைத்திய ஆலோசகர் தலைமையிலான சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார், குற்றவியல் அதிகாரிகள், முறைப்பாடளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள், காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழுவினரே களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரின் மேற்பார்வையின்கீழ் மேற்குறிப்பிட்டவாறு களவிஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.
அவ்விஜயத்தை அடுத்து குறித்த குழுவினரால் தயாரிக்கப்படும் விசாரணை திட்ட அறிக்கை மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான அறிக்கை என்பன எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க காணாமல்போனோர் பற்றி அலுவலகச்சட்டத்தின் 12(டி) பிரிவின் பிரகாரம் குருக்கள்மடம் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளை ஆரம்பிக்குமாறு கடந்த ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரஞ்சித்குமார் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பிரகாரம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடந்த வியாழனன்று குருக்கள்மடம் மனிதப்புதைகுழியை நேரடியாகச்சென்று பார்வையிடுவதற்குரிய ஏற்பாடுகள் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்டன.
அத்தோடு தமது அன்புக்குரியவர்களின் உடல்கள் குருக்கள்மடம் மனிதப்புதைகுழியில் புதைக்கப்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள், அம்மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளைப் பார்வையிடுவதற்கு நீதிவானால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





