உண்மை நிலையை இந்தியா தெளிவுபடுத்த வேண்டும்: சுகாதார தொழில்வல்லுநர்கள் நிறுவகம்
கொள்முதல் செயற்பாடுகளை மேற்கொண்ட அதிகாரிகள் முறைகேடான வகையில் குறித்த அறிக்கைகளை சரியாக பரிசீலனை செய்யாமல் மருந்துகளை இறக்குமதி செய்தார்களா என்பது தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளுமாறு கோருகிறோம்.
சுகாதாரத்துறையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தரமற்ற இந்திய ஊசி மருந்து இறக்குமதி விவகாரம் தொடர்பாக, சுகாதார தொழில்வல்லுநர்கள் நிறுவகம் தனது கடும் கவலையை வெளியிட்டுள்ளது.
கண்டி தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் 'ஓண்டன்செட்ரோன்' என்னும் ஊசி மருந்துகளில் பக்டீரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த உயிரிழப்பு அபாயம் கொண்ட தவறுக்கு இந்திய உற்பத்தியாளர்களா அல்லது உள்நாட்டு அதிகாரிகளா பொறுப்பு என்பதை இந்தியா வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என சுகாதார தொழில்வல்லுநர்கள் நிறுவகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் சுகாதார தொழில்வல்லுநர்கள் அகாடமி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது; கண்டி தேசிய வைத்தியசாலையின் ஆய்வகத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளின் போது, ஓண்டன்செட்ரோன் என்னும் ஊசி மருந்துகளில் பக்டீரியா தொற்றிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இவ்விடயம் சந்தேகத்துக்கு இடமின்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தலைவரும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது சுமார் பத்து வகையான ஊசி மருந்துகள் பயன்பாட்டிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஊசி மருந்துகள் 'அம்பியூல்' எனப்படும் முழுமையாக சீல் வைக்கப்பட்ட கண்ணாடி குப்பிகளில் இறக்குமதி செய்யப்படுவதால், விநியோகத்தின் போதோ அல்லது இடையில் வைக்கப்பட்டிருக்கும் போதோ வெளிப்புறக் கிருமித் தொற்று ஏற்படுவதற்கு எவ்வித வாய்ப்புகளும் இல்லை.
ஆகையால், மேற்படி மருந்துகள் தயாரிக்கப்பட்ட நிறுவனத்திலேயே கிருமித் தொற்று ஏற்பட்டிருக்கலாம். அரச மருந்துக்கூட்டுத்தாபனம் இந்த மருந்துகளை இறக்குமதி செய்தபோது, உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த மற்றும் தரக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் பெற்ற இரண்டு இந்திய ஆய்வகங்களின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே அனுமதி வழங்கியுள்ளது.
அந்த அறிக்கைகளில் மருந்துகள் தரமானவை எனக் குறிப்பிடப்பட்டிருந்தும், நடைமுறையில் அவை கிருமித் தொற்றுடன் காணப்படுவது பாரிய முறைகேடுகளைச் சுட்டிக்காட்டுகின்றது. இந்த விவகாரத்தில் இந்திய நிறுவனம் தரமான மாதிரிகளைக் காண்பித்து, இலங்கைக்குத் தரம் குறைந்த மருந்துகளை விற்பனை செய்ததா? அல்லது இந்தியாவின் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகங்கள் தவறான அறிக்கைகளை வழங்கியதா? என்பது தொடர்பில் சந்தேகம் எழுகிறது.
கொள்முதல் செயற்பாடுகளை மேற்கொண்ட அதிகாரிகள் முறைகேடான வகையில் குறித்த அறிக்கைகளை சரியாக பரிசீலனை செய்யாமல் மருந்துகளை இறக்குமதி செய்தார்களா என்பது தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளுமாறு கோருகிறோம்.
தற்போது நாட்டின் மருந்துத் தேவையில் சுமார் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தியாவிலிருந்தே கொள்வனவு செய்யப்படுகின்றன. 'இந்திய பாமகோபியா தரத்தை இலங்கையில் அங்கீகரிப்பதற்கான புதிய நகர்வுகள் முன்னெடுக்கப்படும் நிலையில், இவ்வாறான தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவது மக்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையலாம்.
சுகாதார அமைச்சு மற்றும் உரிய அதிகாரிகள் இதற்கான பதிலை வழங்கத் தவறியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் இந்திய அரசாங்கமும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் உடனடியாகத் தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றுள்ளது.





