ஈரானிய கப்பலுக்கு உதவும் தீர்மானத்துக்கு சர்வதேச மட்டத்தில் பெரும் வரவேற்பு
அதிஷ்டவசமாக இலங்கை கொண்டிருந்த மனிதாபிமானத்தின் மூலம் 32 பேர் மீட்கப்பட்டனர்' என அமெரிக்க ஊடகவியலாளர் ரையான் க்ரிம் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, இலங்கையின் மனிதாபிமான உதவியைப் பாராட்டியுள்ளார்.
பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டிருந்த ஈரானிய கப்பலுக்கு உதவுவதற்கு இலங்கை மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் பாராட்டையும், வரவேற்பையும் வெளிப்படுத்தியிருக்கும் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் நிபுணர்கள், இத்தீர்மானத்தின் ஊடாக இந்து சமுத்திரத்தின் உண்மையான காவலனாக இலங்கை மாறியிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டு வான்வழித் தாக்குதலில் கடந்த மாதம் 28 ஆம் திகதி ஈரானிய அதியுச்ச தலைவரான அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை அடுத்து மத்திய கிழக்கில் தீவிரமடைந்துவரும் மோதல்களின் நீட்சியாக, இந்தியக் கடற்படையால் கடந்த பெப்ரவரி 15 - 25 ஆம் திகதி வரை விசாகபட்டினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச கடற்படைக் கண்காட்சியில் பங்கேற்று மீண்டும் நாடு திரும்பிக்கொண்டிருந்த ஈரான் கடற்படைக்குச் சொந்தமான 'ஐரிஸ் டெனா' என்ற போர்க்கப்பல் கடந்த புதன்கிழமை (4) அதிகாலை இலங்கையின் காலி நகருக்குத் தெற்கே சுமார் 40 கடல் மைல் தொலைவில் அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிக்கப்பல் நடத்திய தாக்குதல் மூலம் மூழ்கடிக்கப்பட்டது.
அதனையடுத்து இலங்கையிலும் பதற்ற சூழ்நிலையொன்று உருவான பின்னணியில், பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்திற்கொண்டு ஈரான் கடற்படைக்குச் சொந்தமான மற்றொரு போர்க்கப்பலான 'ஐரிஸ் புஷேர்' கொழும்பு துறைமுகத்துக்கு வருவதற்கு வெளிவிவகார அமைச்சிடம் அனுமதி கோரியிருந்தது. அதற்கு நேற்று முன்தினம் (5) இரவு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, நேற்றைய தினம் (6) ஐரிஸ் புஷேர் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டு, அதிலிருந்த 208 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதன் பின்னர், அக்கப்பல் திருகோணமலை துறைமுகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இவ்விவகாரத்தில் இலங்கை மேற்கொண்ட தீர்மானம் சர்வதேச ரீதியில் முக்கிய கவனம் பெற்றிருப்பதுடன், இது மனிதாபிமானம் மிக்கதும், துணிச்சலானதும், சர்வதேச சட்டங்களுக்கு அமைவானதுமான தீர்மானம் என சர்வதேச மட்டத்தில் பலரதும் பாராட்டைப் பெற்றுள்ளது.
அதன்படி பிரபல அரசியல் ஆய்வாளர் கார்ல் ஷா, 'ஈரானிய கப்பலை இலங்கை தனது துறைமுகத்துக்குள் அனுமதித்துப் பாதுகாப்பு வழங்கியிருப்பதுடன் அமெரிக்காவினால் மூழ்கடிக்கப்பட்ட ஐரிஸ் டெனா கப்பலில் இருந்த ஈரானிய வீரர்களை மீட்டுள்ளது. ஆனால் ஐரிஸ் டெனா இந்தியாவின் விருந்தாளியாக இருந்த போதிலும், இவ்விடயத்தில் இந்திய அரசாங்கம் அமைதி காத்துள்ளது. இது இலங்கையை இந்து சமுத்திரத்தின் உண்மையான காவலனாக மாற்றியுள்ளது' என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதேவேளை 'தாக்கப்பட்ட கப்பலில் இருந்த வீரர்கள் மூழ்குவதை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்த அமெரிக்காவின் மீது தான் சகலரது கோபமும் இருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்களா? அதிஷ்டவசமாக இலங்கை கொண்டிருந்த மனிதாபிமானத்தின் மூலம் 32 பேர் மீட்கப்பட்டனர்' என அமெரிக்க ஊடகவியலாளர் ரையான் க்ரிம் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, இலங்கையின் மனிதாபிமான உதவியைப் பாராட்டியுள்ளார்.
மேலும் இலங்கையின் தீர்மானம் தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரபல சமுத்திர ஆய்வாளர் கொலின் முன்ரோ, 'நான் இலங்கையில் சில நாட்களைக் கழித்திருக்கிறேன். அவ்வேளையில் இலங்கை மக்களின் அன்பானதும், சிநேக பூர்வமானதுமான நடத்தையினால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். இப்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கும் நியாயத்துவம் மற்றும் துணிச்சலினால் இன்னமும் ஈர்க்கப்பட்டிருக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க குறிப்பாக பேஸ்புக் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் மேலும் பலர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தீர்மானத்தையும், இலங்கை மக்களின் ஒத்துழைப்பையும் வெகுவாகப் பாராட்டி பதிவுகளை செய்துவருகின்றனர்.





