இலங்கையர்களுக்கு சைப்ரஸில் பரந்த வேலைவாய்ப்பு - அமைச்சர் விஜித ஹேரத்
இங்கு கருத்துத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், சைப்ரஸில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு பெரும் தேவை நிலவுவதாகக் குறிப்பிட்டார்.
இலங்கையர்களுக்கு சைப்ரஸ் குடியரசில் புதிய வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துவது மற்றும் அங்கு பணியாற்றித் திரும்பியவர்களின் நலன்புரித் திட்டங்கள் குறித்து இருதரப்பு விசேட சந்திப்பொன்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கைக்கான சைப்ரஸ் உயர்ஸ்தானிகர் எவாகோராஸ் வ்ரியோனிடீஸ் ஆகியோருக்கு இடையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இங்கு கருத்துத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், சைப்ரஸில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு பெரும் தேவை நிலவுவதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக தாதியியல், சுற்றுலாத்துறை, விவசாயம், நிர்மாணத்துறை மற்றும் கடல்சார் துறைகளில் தகுதியுடைய இலங்கையர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்த இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்களை விரைவில் கையெழுத்திட நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் விஜித ஹேரத் இதன் போது உறுதியளித்தார்.
மேலும், சைப்ரஸில் பணியாற்றிவிட்டு இலங்கைக்குத் திரும்பிய 65 வயதைக் கடந்த தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய சமூகப் பாதுகாப்பு நலன்களை பெறுவதில் உள்ள சிக்கல்கள் குறித்து அமைச்சர் உயர்ஸ்தானிகரின் கவனத்திற்குக் கொண்டுவந்தார். பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையை ஏற்று, இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பதாக உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார். அத்துடன், உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சைப்ரஸ் வருமாறும் அமைச்சருக்கு அவர் அழைப்பு விடுத்தார்.





