தித்வா இழப்பீட்டுத் தொகையை மே இறுதிக்குள் வழங்க பணிப்பு
இன்னமும் முகாம்களில் வசித்து வரும் மக்களுக்கு, புதிய வீடுகள் கிடைக்கும் வரை அவர்களை தற்காலிக வீடுகளில் குடியமர்த்துவது குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.
தித்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 5 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்து பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்தார்.
தித்வா புயலினால் பகுதியளவிலும் முழுமையாகவும் சேதமடைந்த வீடுகளில் வசித்தவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் புதிய வீடுகளை கையளிக்கும் பணிகள் தொடர்பாக 22-04-2026 அன்று ஜனாதிபதி அலுலகத்தில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
முழுமையாக சேதமடைந்த வீடுகளில் வசித்தவர்களுக்குப் புதிய வீடொன்றை வழங்குவது அல்லது வீடொன்றை கொள்வனவு செய்வதற்காக 50 இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை வழங்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அந்த இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இன்னமும் முகாம்களில் வசித்து வரும் மக்களுக்கு, புதிய வீடுகள் கிடைக்கும் வரை அவர்களை தற்காலிக வீடுகளில் குடியமர்த்துவது குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அதற்கேற்ற பொருத்தமான இடங்களைக் கண்டறிந்து, அந்தப் பணிகளை மிக விரைவாக நிறைவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
மிக ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களை வேறு இடங்களில் குடியமர்த்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், புதிய வீடு வாங்குவதற்கு இழப்பீடு பெறாதவர்களுக்காக வீட்டுத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.





