நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட திருத்தம், புதிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற தடுப்பு சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்
தேசிய அபாயகரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபைச்சட்டம் , கணினிக் குற்றச் சட்டம் மற்றும் சூதாட்ட ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைச் சட்டம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்களும் இதில் உள்ளடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்திற்கான திருத்தங்கள் மற்றும் புதிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தடுப்புச் சட்டமூலம் உள்ளிட்ட பல முக்கிய சட்டமூலங்கள் இந்த வாரம் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
தேசிய அபாயகரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபைச்சட்டம் , கணினிக் குற்றச் சட்டம் மற்றும் சூதாட்ட ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைச் சட்டம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்களும் இதில் உள்ளடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக தளங்கள் ஊடாக தனிநபர்கள் மீதான தரக்குறைவான மற்றும் மோசமான தாக்குதல்களைக் கருத்திற் கொண்டே நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படுகிறதே தவிர, கருத்துச் சுதந்திரத்தையோ அல்லது பேச்சுச் சுதந்திரத்தையோ முடக்குவது இந்த திருத்தங்களின் நோக்கம் அல்ல என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இணையவழிக் குற்றங்கள் தொடர்பாக நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்கள் தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்குப் போதுமானதாக இல்லை எனவும், இதனால் தற்காலத்திற்கு ஏற்ற வகையில் அச்சட்டங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோரால் இந்த சட்டமூலங்கள் கூட்டாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





