கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவு
வழக்கு 08-07-2026 அன்று கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மர்மமான முறையில் உயிரழந்த ஸ்ரீலங்கன் எர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறை வேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேனவின் மரண விசாரணைக்கு அமைய, அவரது பிரேத பரிசோதனை அறிக்கையை விரைவில் மன்றுக்கு சமர்ப்பிப்பதுக்கு நடவடிக்கை எடுக்குமாறு அரச பிரதான சட்ட வைத்திய அதிகாரிக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது.
மேற்படி வழக்கு 08-07-2026 அன்று கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
நேற்றைய தினம் கபில சந்திரசேனவின் மரண விசாரணைகளை முன்னெடுத்துவரும் கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகள் மன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்கையில், பிரேத பரிசோதனை அறிக்கையை தயாரிப்பதுக்கு அவசியமான இரசாயன பகுப்பாய்வு அறிக்கை பிரதான சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அரச இரசாயன பகுப்பாய்வு பிரிவினரால் வழங்கப்பட்ட அறிக்கை மாத்திரமே இவ்வாறு பிரதான சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. எனினும் மேலும் ஒரு சில இரசாயண பகுப்பாய்வு அறிக்கைகள் கிடைக்கப்பெற வேண்டியுள்ளதாக நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.
தொடர்ந்து விசாரணை அதிகாரிகள் விடயங்களை முன்வைக்கையில், சட்ட வைத்திய அதிகாரி பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்குவதற்கு, சகல இரசாயண பரிசோதனை அறிக்கைகளும் கிடைக்கப்பெறுவது அவசியம் என அதிகாரிகள் மன்றில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்நிலையில் மன்றில் முன்வைக்கப்பட்ட சமர்பணங்களை பரிசீலனை செய்த நீதிவான், பிரேத பரிசோதணை அறிக்கையை மன்றில் சமர்ப்பிப்பதுக்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவித்து பிரதான சட்ட வைத்திய அதிகாரி மற்றும் பிரேத பரிசோதனைக்கு அவசியமான சகல இரசாயண பகுப்பாய்வு அறிக்கைகளையும் வழங்குவதுக்கு நடவடிக்கை எடுக்குமாறு இரசாயன பகுப்பாய்வு பிரிவுக்கு மீள நினைவூட்டல் அறிவித்தலும் விடுத்திருந்தார். மேலும் இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை 22 ஆம் திகதி அன்று மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.





