தென்கொரியாவில் அதிகமான தொழில் வாய்ப்புக்கள்; வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்
இதற்கு முன்னர் தென்கொரியாவில் யொன்ங்வோல் மாகாணத்துடன் கடற்றொழில் மற்றும் விவசாய துறைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவும் அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றது.

அரசாங்கம் இலங்கை தொழிலாளர் சமூகத்துக்கு அதிகப்படியான சம்பளம் மற்றும் ஆரோக்கியமான தொழிலை பெற்றுக்கொடுப்பதற்காக மேற்கொண்டுவரும் வேலைத்திட்டத்துக்கு இணக்கம் தெரிவித்து தென்கொரியாவில் அதிகமான தொழில் வாய்ப்புக்கள் தற்போது கிடைத்து வருகின்றன.
அதன்பிரகாரம் அந்த நாட்டின் பருவகால தொழில் குழுவின் (ஈ8) கீழான தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கு கொரியாவின் பொசொங் உள்ளூராட்சி நிறுவனத்துடன் மேற்கொண்ட கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதுடன் அதுதொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தினால் அதுதொடர்பான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊடாக இலங்கை தொழிலாளர்களுக்கு பருவகால தொழில் திட்டத்தின் கீழ், அதிகபட்ச 8 மாதங்கள் வரை பொசாெங் மாகாணத்தில் விவசாய கிராமங்களில் பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.
கொரிய அரசாங்கத்தின் ஈ8 விசா குழுவின் கீழ் இலங்கை தொழிலாளர்களை பணியமர்த்துவதை இலகுபடுத்துவதற்கான ஒரு முன்னோடி திட்டமாக செயற்படுத்துவதற்கும் அதற்காக ஆர்வம் காட்டுகின்ற உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுடன் கலந்துரையாடுவதற்காக அமைச்சர் விஜித்த ஹேரத்தினால் கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி மற்றும் இந்த மாதம் 1ஆம் திகதி அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்த அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது.
இதேவேளை, இதற்கு முன்னர் தென்கொரியாவில் யொன்ங்வோல் மாகாணத்துடன் கடற்றொழில் மற்றும் விவசாய துறைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவும் அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றது. அதன் பிரகாரம் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக பணியகம் தெரிவித்துள்ளது.
தொழிலாளர்களை இணைத்துக்கொள்ளும் முறை மற்றும் அதற்கு தேவையான வசதிகள் தொடர்பில் மக்களுக்கு தகவல்கள் வழங்கப்படும் என்பதுடன் அதுவரை அரசாங்கத்தின் உத்தியோபூர்வ அறிவிப்புகளுக்கு மாத்திரம் கவனம் செலுத்துமாறும் பணியம் தெரிவித்துள்ளது. பல்வேறு பிரசாரங்களை மேற்கொண்டு தொழில் எதிர்பார்ப்புடன் இருப்பவர்களை ஏமாற்றி, நிதி மோசடி செய்யும் நபர்களிடம் சிக்கிக்கொள்ள வேண்டாம் எனவும் பணியகம் பொது மக்களிடம் கேட்டுக்கொள்கிறது.