மு.க.ஸ்டாலினுடன் ஹக்கீம் சந்திப்பு
திருச்சி, டி. வி. எஸ். டோல்கேடில் உள்ள அரசினர் விருந்தினர் இல்லத்தில் 10-11-2025 அன்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை அவர் சந்தித்து, பொன்னாடை போர்த்திய பின்,நடந்த உரையாடலின் போது முதல்வரிடம் சில கோரிக்கைகள் குறித்து பேசினார். அவற்றை சாதகமாகப் பரிசீலனை செய்வதாக முதல்வர் கூறியுள்ளார்.
திருச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசியவை பற்றி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு இலங்கை தமிழ் அகதிகளுக்காக விஷேட வீடமைப்பு செயல் திட்டத்தை, தமிழகத்தின் கடந்த வரவு செலவுத்திட்டத்தில் அறிவித்தமைக்காக தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் சார்பில் நன்றி தெரிவித்ததாக, திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்தெரிவித்துள்ளார்
திருச்சி, டி. வி. எஸ். டோல்கேடில் உள்ள அரசினர் விருந்தினர் இல்லத்தில் 10-11-2025 அன்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை அவர் சந்தித்து, பொன்னாடை போர்த்திய பின்,நடந்த உரையாடலின் போது முதல்வரிடம் சில கோரிக்கைகள் குறித்து பேசினார். அவற்றை சாதகமாகப் பரிசீலனை செய்வதாக முதல்வர் கூறியுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் முதல்வரிடம் வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து கூறியவையாவன;
தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை காலையில் திருச்சியில் சந்தித்தேன். இதன்போது திருச்சி ஊடகவியலாளர் எம். கே. ஷாகுல் ஹமீது உடனிருந்தார்.
ஆரம்பத்தில்,இலங்கை தமிழ் அகதிகளுக்காக விஷேட வீடமைப்பு செயல் திட்டத்தை, தமிழகத்தின் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்தமைக்காக முதலமைச்சருக்கு இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் சார்பில் நன்றி தெரிவித்தேன்.
இந்தியா - இலங்கை நாடுகளுக்கு இடையிலான உறவில் இன்னும் தீர்வு காணப்படாமல் இருக்கும் முக்கிய அம்சமாக தமிழ் நாட்டு மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையி லான முரண்பாடுகள் இருந்து கொண்டிருக்கின்றன.
இவை குறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் உள்ளிட்ட குழுவினர் இலங்கை வந்திருந்தபோது,என்னுடன் சென்று இலங்கைப் பிரதமரை உத்தியோகபூர்வமாகச் சந்தித்து உரையாடியிருந்தனர்.
இந்த மீனவர் பிரச்சினைக்கு, இருதரப்பினரும் அடங்கிய கூட்டுறவு அமைப்பொன்றை உருவாக்கி, அதை இரு தரப்பு மீனவர்களும் ஒற்றுமையாகச் செயல்படுத்துவதற்கான திட்ட வரைவொன்று தயாரிக்கப்பட வேண்டும் என இலங்கை பிரதமருக்கு ஆலோசனை முன்வைக்கப்பட்டது.
இலங்கை வெளியுறவு அமைச்சுடன் கலந்தாலோசித்து இதுகுறித்து சாதகமாக நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான பரிசீலனைகள் முன்னெடுக்கப்படும் என்று ஒரு நம்பிக்கையை அதன்போது பிரதமர் வெளியிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில், இலங்கை பாராளுமன்றத்தில் நாங்களும் இந்த ஆலோசனை குறித்த முன்னேற்பாடுகளுக்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று கேட்கவிருப்பதாகவும் தமிழ்நாடு முதலமைச்சரிடம் தெரிவித்தேன்.
அதுகுறித்து சாதகமாக பரிசீலிக்க முடியுமாக இருந்தால், அதற்கு இலங்கைப் பாராளுமன்றத்தில் நாங்கள் முன்வைக்கும் விடயம் ஆசீர்வாதமாக அமையும் என்று நான் முதலமைச்சரவரிடம் சொல்லி வைத்தேன்.
இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கும் ,தமிழ்நாட்டு முஸ்லிம்களுக்கும் இடையில் மிக நீண்ட காலமாக ஆன்மிகம், மொழி ரீதியான தொடர்பாடல்கள் இருந்து வருவது மட்டுமல்ல; இலங்கை முஸ்லிம்களின் ஆன்மிக, பொருளாதார வளர்ச்சியில் இந்திய முஸ்லிம் களின் பங்களிப்பும் அதிகமாக இருந்திருக்கின்றது.
இது தொடர்பாக உத்தியோகபூர்வ ஆய்வு ஒன்றை நடத்தி, அதை ஒரு வெளியீடாகக் கொண்டு வருவதற்கு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அதற்கு இலங்கை தரப்பில் இருந்து நாங்களும் ஒத்துழைக்க முடியும் என்றும் முதலமைச்சரிடம் நான் ஆலோசனை கூறி இருக்கிறேன்.
அதுபோல, மலையகத்தில் வாழ்கின்ற இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் கோயில் நிர்மாணத்தில் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள சிற்பக்கலை நிபுணர்களை அனுப்பி, அந்தக் கோயில் நிர்மாணப் பணிகளுக்கு ஒத்தாசை வழங்க தமிழ்நாடு அரசு உதவி வழங்க முடியுமாக இருந்தால்,அவர்களுக்கு அது மிகவும் பெறுமதியானதாக இருக்கும் என்றும் முதலமைச்சரிடம் சுட்டிக்காட்டினேன்.
இவற்றுக்கு முதலமைச்சர் ஆவன செய்வார் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு நிறையவே இருக்கின்றது.
சென்ற செப்டெம்பர் மாதம் 19ஆம் திகதி இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற நாகூர் ஈ.எம். ஹனீபா நூற்றாண்டு விழா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனுக்கு தமிழக அரசின் உயர் விருதான தகைசால் தமிழர் விருது பெற்றதற்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சார்பில் மாநிலங்கள் அவை முன்னாள் உறுப்பினர் புதுக் கோட்டை எம்.எம்.அப்துல்லாஹ்வை எனக்கு முகவரியிட்ட வாழ்த்துச் செய்தியுடன் அனுப்பி வைத்ததற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்தேன் என்றார்.





