மன்னாரில் 14 காற்றாலைகளை அமைப்பதற்கு முயற்சி: சாணக்கியன் எம்.பி.
இந்த காற்றாலைகளுக்கு மக்கள் இணக்கப்பாடுகளை தெரிவித்துள்ளதாக குறிப்பிடுவது என்பது தவறானது.
மன்னார் மாவட்டத்தில் புதிதாக காற்றாலைகளுக்கு இடமளிக்கப்படாது என்று ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்திருந்தார். ஆனால் மன்னார் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அந்த பிரதேசத்தில் 14 காற்றாலைகளை நிர்மாணிக்க வேண்டும் என்று ஜனாதிபதி தற்போது குறிப்பிடுகிறார். இது தொடர்பில் வடக்கு மாகாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புக் கூற வேண்டும். இந்த காற்றாலைகளுக்கு மக்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடுவது என்பது தவறானது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 20-11-2025அன்று நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் வலுசக்தி அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, அரசாங்கம் கவிழ்வதற்கு காரணமான அமைச்சே அமைச்சர் குமார ஜயக்கொடியிடம் இருக்கின்றது. 2022 மற்றும் 2023 காலப்பகுதியில் பொருளாதார நெருக்கடியின் போது அதிகளவில் பாதிக்கப்பட்ட அமைச்சே இது. இந்த அமைச்சின் வேலைத்திட்டங்கள் காரணமாகவே நாட்டில் போராட்டங்களும் தோற்றம் பெற்றன.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு பிரதான காரணமாகவும் இந்த அமைச்சே இருந்தது. இதனால் ஆட்சிக்கு வர முன்னர் இந்த அமைச்சு தொடர்பில் செய்ய முடியாத பல்வேறு வாக்குறுதிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எரிபொருளுக்கான வரியே அதன் விலை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்தது. அவ்வாறான நேரத்தில் நீங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்தனர். அதனை செய்ய முடியாது போயுள்ளது. ஆனால் அதனை செய்யக்கூடிய வகையிலான முறைமைகள் உள்ளன.
இலங்கையை போன்ற பொருளாதாரத்தை கொண்ட நாடுகளை பார்க்கும் போது அந்த நாடுகள் வலுச்சக்தியை எவ்வாறு முகாமைத்துவம் செய்கின்றது என்று ஆராய்ந்தால் இலங்கைக்கு சிறந்த பாடத்தை கற்றுக்கொள்ள முடியும்.
குறிப்பாக நேபாளம் மற்றும் பூட்டான் போன்ற நாடுகளில் வலுச்சக்தி பாதுகாப்பு மிகவும் முன்னணியில் இருக்கின்றது. அங்கு வலுசக்தி பாதுகாப்பு முகாமைத்துவத்திற்கு நிலத்தொடர்பு உள்ள நாடுகள் இந்தியாவுடன் எரிசக்தி தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள மற்றைய நாடுகளுக்கு இடையில் அந்த இணைப்புகளை கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன. இதுபோன்று இலங்கை எதிர்காலத்தில் வலுச் சக்தி நெருக்கடிகள் ஏற்படாத வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க வேண்டும்.
இந்தியாவுடன் எரிபொருள் தொடர்புகளை ஏற்படுத்தி, குழாய் வழியில் அதனை இலங்கைக்கு கொண்டு வந்தால் எமக்கு இலங்கையில் எரிபொருள் விலைகளையும் குறைக்க முடியும். திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்து தேவையானவற்றை சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.
அதன்மூலம் எதிர்காலத்தில் எரிபொருள் தொடர்பில் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படாது. நாங்கள் இந்தியாவை பார்த்து பயப்படத் தேவையில்லை. இந்திய மக்கள் தான் எங்ளை பார்த்து பயப்பட வேண்டும். இலங்கையில் இருப்பிடம் இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புடையது. இதனால் நாம் பயப்பட வேண்டியதில்லை.
அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கில் தேர்தல் காலத்தில் ஜனாதிபதியினால் சில வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அதில் மன்னார் காற்றாலைகள் தொடர்பில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டது. அங்கு புதிதாக காற்றாலைகளுக்கு இடமளிக்கப்படாது என்று கூறப்பட்டது.
ஆனால் அங்குள்ள மக்களின் விருப்பத்திற்கு மாறாக அந்த பிரதேசத்தில் 14 காற்றாலைகளை நாங்கள் செய்தே ஆக வேண்டும் என்று தற்போது ஜனாதிபதி கூறியுள்ளார்.
இது தொடர்பில் வடக்கு மாகாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புக் கூற வேண்டும். இந்த காற்றாலைகளுக்கு மக்கள் இணக்கப்பாடுகளை தெரிவித்துள்ளதாக குறிப்பிடுவது என்பது தவறானது.
இது தொடர்பில் மக்கள் மத்தியில் ஆதங்கம் இருக்கின்றது. அமைச்சரின் வீட்டுக்கு அருகில் காற்றாலையை அமைத்து அதன் சத்தம் உங்கள் காதுகளுக்கு வரும் போதே உங்களுக்கு அந்த பாதிப்பு தெரியும். இது போன்று இன்னும் பல சிக்கல்கள் இருக்கின்றன.
14 காற்றாலைகளையும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நிறைவேற்று ஜனாதிபதியென நீங்கள் அந்த காற்றாலைகளை அமைத்தாலும் அதனையும் தாண்டி எதனையும் செய்யக்கூடாது என்றும் கோருகின்றேன் என்றார்.





