நாடளாவிய ரீதியில் அரச மருத்துவ அதிகாரிகள் வேலைநிறுத்தம்
எழுத்துப்பூர்வமான உறுதிமொழிகளின் அடிப்படையில், இதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சு இணக்கம் தெரிவித்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்த தவறியமையைக் கண்டித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.
எனினும், இந்த வேலைநிறுத்தத்தின் போது அவசர சிகிச்சை சேவைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சுகாதார அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வமான உறுதிமொழிகளின் அடிப்படையில், இதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
அனைத்து பங்குதாரர்களின் பங்களிப்பு மற்றும் இணக்கப்பாட்டுடன் 'இலங்கை மருத்துவ சேவை' எனும் பெயரில் ஒரு விசேட சேவை வகையை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெறுதல், இடையூறு, இருப்பு மற்றும் போக்குவரத்து கொடுப்பனவை இற்றைப்படுத்துதல், 22/99 இலக்கச் சுற்றறிக்கைக்கு இணங்க போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல்,
மேலதிக நேரக்கொடுப்பனவை நிலையான கொடுப்பனவாக மாற்றுதல், ஜனவரி 5 ஆம் திகதி முதல் நிதி அமைச்சின் பேச்சுவார்த்தைகள் மூலம் ஆராய்ச்சி கொடுப்பனவு தொடர்பான சிக்கல்களைத் தீர்த்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
அது மாத்திரமின்றி இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவோ அல்லது உடன்பாடுகளை நடைமுறைப்படுத்தவோ சுகாதார அமைச்சு தவறியுள்ளதால், வலுவான தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் தமக்கு ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.





