ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியுடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு
ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியினர், அவ்வாறு ஒப்பந்தத்தில் இருந்து விலகியதாகத் தாம் கருதவில்லை எனவும், தொடர்ந்து ஒன்றிணைந்து பயணிப்பதற்கே தாம் விரும்புவதாகவும் தெரிவித்தனர்.
மக்கள் மத்தியில் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நியாயப்படுத்தி, அதனைத் தொடர்ந்து முன்கொண்டுசெல்லமுடியும் என்றவாறான பிரசாரங்களை மேற்கொள்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும், இவ்வாறான செயற்பாடுகளுக்கும் 'ஏக்கிய இராச்சிய' அரசியலமைப்பை முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் இடையில் எவ்வித வேறுபாடும் இல்லை எனவும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி உறுப்பினர்களிடம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களின்போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கும், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்கும் இடையில் கொள்கை ரீதியிலான இணக்கப்பாடொன்று எட்டப்பட்டிருந்து.
இருப்பினும் நீண்டகாலம் நடத்தப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டுவரும் மாகாணசபைத்தேர்தல்கள் விரைவில் நடத்தப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், அதற்குரிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கிலும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி உள்ளடங்கலாக தமிழ்த்தேசியக் கட்சிகளின் பங்கேற்புடன் கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது.
அச்சந்திப்பில் மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துவதற்குரிய அழுத்தங்களைப் பிரயோகிப்பதுடன் அத்தேர்தலை இலக்காகக்கொண்டு தமிழ்த்தரப்புக்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் பயணிக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதுமாத்திரமன்றி மாகாணசபை முறைமை தொடர்பில் மக்களைத் தெளிவூட்டும் வகையிலான கூட்டங்களும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரனால் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தன.
அதனையடுத்து சில தினங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்திய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 'ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி பதவிகளைக் கைப்பற்றுவதற்காக எமது உதவிகளைப் பெற்றுவிட்டு, அவ்வேளையில் செய்த ஒப்பந்தங்களை மீறுகின்ற வகையில் இப்போது அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் தொடர்பில் கூட்டங்களை நடத்துவதை எம்மோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் இருந்து தாமாகவே விலகும் செயலாகவே நாம் கருதுகின்றோம்' என அறிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் இதுகுறித்து விளக்கமளிக்கும் வகையில் சந்திப்பொன்றை நடத்துவதற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியிடம் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி நேரம் கோரியிருந்தது.
அதற்கமைய நேற்று திங்கட்கிழமை (11) காலை 9.00 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள கஜேந்திரகுமாரின் இல்லத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரும், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் செயலாளர் இரட்ணலிங்கம், ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், பத்மலிங்கம், சந்திரகுமார், ஈசன் மற்றும் விதுரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார், மக்கள் மத்தியில் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நியாயப்படுத்தி, அதனைத் தொடர்ந்து முன்கொண்டுசெல்லமுடியும் என்றவாறான பிரசாரங்களை மேற்கொள்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும், இவ்வாறான செயற்பாடுகளுக்கும் 'ஏக்கிய இராச்சிய' அரசியலமைப்பை முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் இடையில் எவ்வித வேறுபாடும் இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
அதுமாத்திரமன்றி இந்நிலைப்பாட்டை ஏற்கனவே தெரியப்படுத்தியதன் பின்னரும் மாகாணசபைத்தேர்தல் தொடர்பில் மக்கள் கூட்டங்களை நடத்தும் செயற்பாட்டை அவர்களாகவே ஒப்பந்தத்தில் இருந்து விலகும் செயலாகவே தாம் கருதுவதாகத் தெரிவித்த கஜேந்திரகுமார், எனவே ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் எதிர்கால நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே இதனை சீரமைக்கமுடியும் எனவும் குறிப்பிட்டார்.
அதற்கு பதிலளித்த ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியினர், அவ்வாறு ஒப்பந்தத்தில் இருந்து விலகியதாகத் தாம் கருதவில்லை எனவும், தொடர்ந்து ஒன்றிணைந்து பயணிப்பதற்கே தாம் விரும்புவதாகவும் தெரிவித்தனர்.
இருப்பினும் சந்திப்பில் கலந்துகொண்ட பிரதிநிதிகளின் கருத்துக்களின் பிரகாரம், இச்சந்திப்பின்போது இருதரப்பு இணக்கப்பாடுகள் எவையும் எட்டப்படவில்லை.





