5 மாவட்டங்களில் 50 பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு
நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழந்துள்ளதோடு, 35 பேர் காணாமல் போயுள்ளனர். குருணாகலில் 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 11 பேர் காணாமல் போயுள்ளனர்.
நாட்டில் தற்போது சீரற்ற காலநிலை ஓரளவு குறைவடைந்துள்ளது. எனினும் ஆரம்பித்துள்ள வடகீழ் பருவ பெயர்ச்சி மழை காரணமாக ஏற்கனவே மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் அவ் எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் வசந்த சேனாதீர தெரிவித்தார்.
அதற்கமைய 5 மாவட்டங்களில் 50 பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது. கண்டி, கேகாலை, மாத்தளை, குருணாகல் மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. இவை தவிர இரண்டாம் கட்டத்தில் 4 மாவட்டங்களில் 22 பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் முதலாம் கட்டத்தில் 7 மாவட்டங்களில் 27 பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கையும் தொடர்ந்தும் நடைமுறையிலிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை கடந்த நவம்பர் 21ஆம் திகதி முதல் நேற்று இரவு வரையான காலப்பகுதியில் தித்வா புயலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 இலட்சத்தைக் கடந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை 627 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 190 பேர் காணாமல் போனோர் பட்டியலிலேயே உள்ளனர். அதிகளவான உயிரிழப்புக்கள் கண்டி மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளன. இம்மாவட்டத்தில் மாத்திரம் 232 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 81 பேர் காணாமல் போயுள்ளனர்.
அடுத்ததாக பதுளையில் 90 பேர் உயிரிழந்துள்ளதோடு, 11 பேர் காணாமல் போயுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழந்துள்ளதோடு, 35 பேர் காணாமல் போயுள்ளனர். குருணாகலில் 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 11 பேர் காணாமல் போயுள்ளனர். இதேபோன்று புத்தளம் (35), கேகாலை (32), மாத்தளை (28), கம்பஹா (13), அநுராதபுரம் (12) ஆகிய மாவட்டங்களிலும் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. அது மாத்திரமின்றி காலி, திருகோணமலை தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களிலும் 4517 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 25 மாவட்டங்களிலும் 76 066 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள் தற்போது படிப்படியாக அவற்றிலிருந்து வெளியேறி தமது இருப்பிடங்களில் மீளக் குடியேற ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் நேற்று வரை 27 663 குடும்பங்களைச் சேர்ந்த 89 857 பேர் மாத்திரமே 956 தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளர். எவ்வாறிருப்பினும் தற்போது வரை ஒட்டுமொத்தமாக 611 530 குடும்பங்களைச் சேர்ந்த 2, 179, 138 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.





