மாகாணசபைத் தேர்தல் வாக்குறுதியை அரசாங்கம் மீறியுள்ளது - மனோ கணேசன்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தின் பங்காளிகள் அல்ல நாங்கள் ஆனால் இலங்கை எனும் இராச்சியத்தின் பங்காளிகள்
மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துவதாக வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் மீறியுள்ளது. மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்கு பாராளுமன்ற விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதற்கான சாத்தியமான அறிகுறிகள் காணப்படுவதில்லை.ரில்வின் சில்வாவின் கருத்து முறையற்றது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, 2025 ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக குறிப்பிட்டே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்தார். 2025 முடியாது 2026 ஆம் ஆண்டு தேர்தலை நடத்துவதாக பின்னர் குறிப்பிட்டார். இனப்பிரச்சினைக்குத் தீர்வாகவே மாகாண சபைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. யுத்தம் முடிவடைந்தவுடன், மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டது.
காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்ற நிலையில் மக்கள விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா வடக்குக்குச் சென்று இந்த ஆண்டு மாகாணசபைத் தேர்தலை நடத்தப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு என்றால் மாகாணசபைத் தேர்தல் கடந்த ஆண்டும் இல்லை, இந்த ஆண்டும் இல்லை. மாகாணசபைத் தேர்தலை ஒருவருட காலத்துக்குள் நடத்துவதாக வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் மீறியுள்ளது. மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்கு பாராளுமன்ற விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் நானும் உறுப்பினராக உள்ளேன். தேர்தலை நடத்துவதற்கான எவ்விதமான அறிகுறியும் அங்கு தென்படுவதில்லை.
டொலர் நெருக்கடி இல்லை, ரூபா நெருக்கடி இல்லை என்று 2022 ஆம் ஆண்டு கோட்டபய ராஜபக்ஷ, கப்ரால் ஆகியோர் குறிப்பிட்டார்கள். ஆனால் இறுதியில் நேர்ந்தது என்னவென்பதை அனைவரும் அறிவோம். தற்போதைய நெருக்கடியான நிலையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய மட்டத்தில் செயற்பட வேண்டும். தற்போதைய நிலையில் நாட்டை பாதுகாப்பதற்கு முன்னுரிமையளிக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறோம்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தின் பங்காளிகள் அல்ல நாங்கள் ஆனால் இலங்கை எனும் இராச்சியத்தின் பங்காளிகள் ஆகவே 2022 ஆம் ஆண்டு காலப்பகுதி மீண்டும் தோற்றம் பெறக்கூடாது என்பதையே குறிப்பிடுகிறோம். ஜனாதிபதி தற்போதைய தருணத்தில் எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணைந்து நாட்டுக்காக செயற்பட வேண்டும் என்றார்.





