பேடன் பவல் பிரபுவின் 169-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பு
இலங்கைச் சாரணர் சங்கத்தின் பிரதம சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார அவர்களினால் பிரதமருக்கு விசேட சாரணர் முத்திரைத் தொகுப்பும் நினைவு உறையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
உலகச் சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் லோர்ட் பேடன் பவல் பிரபுவின் 169-வது பிறந்தநாள் மற்றும் உலகச் சாரணர் 'சிந்தனை தினத்தை' முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட விழா,பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கொழும்பு, தேசிய சாரணர் தலைமையகத்தில் 22-02-2026 அன்று மிக விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது, சாரணர் தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள பேடன் பவல் பிரபுவின் சிலைக்குப் பிரதமர் மலரஞ்சலி செலுத்தித் தனது மரியாதையைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய பிரதமர்,
சாரணர் இயக்கம் என்பது வெறும் பதவிகளை வகிப்பதல்ல, அது 'தயார் நிலையில் இருப்பதற்கும்', பிறருக்கு உதவுவதற்கும் சேவை செய்வதற்கும் கிடைக்கப்பெறும் ஒரு உன்னதமான பயிற்சியாகும், எனத் தெரிவித்தார்.
நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் அதேவேளை,பிறரை மதிக்கும், ஒழுக்கமான, புத்திசாலித்தனமான 'ஸ்மார்ட்' சாரணர்களாகச் சமூகத்திற்குச் சேவை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது சுட்டிக்காட்டிய பிரதமர், மரம் நடுதல் மற்றும் நீர் நிலைகளைப் பாதுகாத்தல் போன்ற சூழல்நேயச் செயற்திட்டங்கள் ஊடாக, பொறுப்புணர்வுடன் நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் பங்களிப்பு வழங்குமாறு சாரணர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இவ்விழாவில்,சாரணர் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் சில மாவட்டங்களுக்கு அடையாள ரீதியாக மடிக்கணினிகள் மற்றும் முதலுதவிப் பெட்டிகள் ஆகியன வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன், இலங்கைச் சாரணர் சங்கத்தின் பிரதம சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார அவர்களினால் பிரதமருக்கு விசேட சாரணர் முத்திரைத் தொகுப்பும் நினைவு உறையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி,சாரணர் சங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வருகை தந்த பெருந்திரளான சாரண மாணவர்கள் கலந்துகொண்டனர்.





