அடுத்த இரண்டு மாதங்களுக்கே உத்தரவாதங்களை அளிக்க முடியும்; ஜனாதிபதி அநுர
நாம் அனைவரும் அதிகபட்சம் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே அதை கணிக்க முடியும். இந்த போர் இரண்டு மாதங்களுக்கு மேல் நீடித்தால், நமது கணிப்புகள் அர்த்தமற்றதாகிவிடும்.
சர்வதேச ரீதியாக எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் நிலவினாலும், இலங்கை அரசு மு முற்கூட்டிய நடவடிக்கைகள் எடுத்துள்ளது. எனினும் அடுத்த இரண்டு மாதங்களுக்கே உத்தரவாதங்களை அளிக்க முடியும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அரசு எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்திருந்தாலும், தற்போதைய சர்வதேச பதற்ற நிலை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் 11-03-2026 அன்று நடைபெற்ற இலங்கை இளம் தொழில்முனைவோர்கள் சபையின் 2026 வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ‘தலைமுறை தலைமுறையாக வலுவான நாளையை உருவாக்கும் இன்று’ எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த மாநாடு நடைபெற்றது.
அங்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
சில ஆண்டுகளுக்கு முன்பு நமது நாடு பாரிய வீழ்ச்சியைச் சந்தித்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு எதுவும் எஞ்சாது. அனைத்தும் முடங்கி விடும். அது சமூகக் கட்டமைப்பிற்கு எவ்வளவு பெரிய அழிவைக் கொண்டு வரும் என்பதற்கு அண்மைக் காலத்தில் நமக்கு கசப்பான அனுபவங்கள் உள்ளன. எனவே, ஒரு அரசாங்கம் என்ற வகையில் பொருளாதாரம் மீதான நம்பிக்கையை மீண்டும் கொண்டு வருவதே எமது முதல் பொறுப்பாகும்.
நாம் பதவியேற்கும் போது சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு விரிவான கடன் திட்டத்தில் இணைந்திருந்தோம். அதில் சில இலக்குகள் வழங்கப்பட்டிருந்தன. அந்த இலக்குகளைத் தாண்டி, பொருளாதாரம் குறித்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் பல காரணிகள் உள்ளன.
இலங்கை வரலாற்றில் மிகக் குறைந்த வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையை 2025 இல் பதிவு செய்தது. நடைமுறைக் கணக்கு மீதியை மேலதிகமாக மாற்றியது, பல தசாப்தங்களுக்குப் பிறகு 2025 இல் 17.2 சதவீத வருமானத்தைப் பதிவு செய்தது மற்றும் இலங்கைக்கு அதிகப்படியான வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் கிடைத்த ஆண்டாக 2025 ஐ மாற்றியது போன்றவை எமது விசேட வெற்றிகளாகும்.
இப்போது நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமாக உள்ளது. ஆனால் நமக்குத் தேவை அசைக்க முடியாத பொருளாதாரம். வெளிப்புற மற்றும் உள்நாட்டு அதிர்வுகளுக்குத் தாக்குப் பிடிக்கக்கூடிய பொருளாதாரத்தை நாம் உருவாக்க வேண்டும். ஆனால் தற்பொழுது எமக்கு வெளி அதிர்வுகளின் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு வலயத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகம் சந்தைகளினால் பிணைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பல்வேறு துறைகளினால் பிணைக்கப்பட்டுள்ள உலகில் ஏற்படுகின்ற எந்தவொரு அதிர்வும் எம்மில் தாக்கத்தை ஏற்படுத்தும். இத்தகைய அதிர்வுகளை நாம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்பதே முக்கியமான விடயமாகும்.
பொதுவாக, மார்ச் மாத தொடக்கத்தில், ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை சுமார் 70 டொலராக இருந்தது. இப்போது அது 100 டொலராக உயர்ந்துள்ளது. இது சுமார் 42சதவீதம் அதிகரிப்பு. மசகு எண்ணெய் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாக உள்ளது.
எனவே, உலகில் உள்ள அனைவரும் இந்த நிச்சயமற்ற சூழ்நிலையில் பங்காளர்களாக மாறிவிட்டனர். மேலும் சமூக நடத்தை குறிப்பிட்ட நெருக்கடி சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. நான் பொது மக்களை குறை சொல்லவில்லை. எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டின் விளைவுகளுக்கு நம் நாட்டு மக்கள் முகங்கொடுத்தனர்.
தீயில் கருகிய ஒருவர் தீப்பொறியைக் கண்டாலும் பயப்படுவார் என்று ஒரு பழமொழி உண்டு. அதனால் தான் மக்கள் எரிபொருள் வரிசையில் நிற்கிறார்கள். அவர்கள் எரிபொருளை சேமித்து வைக்கத் தொடங்குகிறார்கள். மார்ச் முதலாம் திகதி எங்கள் டீசல் விற்பனை 4500 கிலோலீற்றராக இருந்தது. மார்ச் 3 ஆம் திகதி எங்கள் டீசல் விற்பனை 10 500 கிலோலீற்றராக அதிகரித்தது.
பெற்றோல் விற்பனை சுமார் 4000 கிலோலீற்றரிலிருந்து 9000 ஆக அதிகரித்துள்ளது. இப்போது அது மீண்டும் 6000 ஆகக் குறைந்துள்ளது. எனவே, இதிலிருந்து யாரும் தனியாக பாதுகாப்பாக இருக்க முடியாது என்று நான் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். நாம் ஒவ்வொருவரும் இதற்காக ஏதாவது செய்து அதை எதிர்கொண்டால், நாம் அனைவரும் இதிலிருந்து மீண்டு வரலாம்.
இந்த வெளிப்புற அலுத்தம் நம் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால்தான் நாம் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியிருந்தது. நமது எரிபொருள் சந்தையில் 47 சதவீதம் வெளிப்புற நிறுவனங்களின் கைகளில் உள்ளது. எனவே, நாம் அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்க வேண்டும். மேலும் எரிபொருளை சாதாரண நுகர்வு நிலைக்கு கொண்டு வர வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து அதை இன்னும் கொஞ்சம் குறைக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.
தொடர்ச்சியான வலுசக்தி விநியோகத்தை உறுதி செய்வதாகும். நாம் தொடர்ச்சியான வலுசக்தி விநியோகம் தொடர்பாக உத்தரவாதம் அளிக்க முடியும். ஆனால் நாம் அனைவரும் அதிகபட்சம் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே அதை கணிக்க முடியும். இந்த போர் இரண்டு மாதங்களுக்கு மேல் நீடித்தால், நமது கணிப்புகள் அர்த்தமற்றதாகிவிடும்.
தொழில்நுட்பமும் விஞ்ஞானமும் போருக்கு பாரிய சக்தியை உருவாக்கியிருக்கும் ஒரு சகாப்தம் இது. எனவே, இந்த சக்திவாய்ந்த ஆயுதங்கள் என்ன சூழ்நிலையை உருவாக்கும் என்பதை நாம் கணிக்க முடியாது. குறுகிய காலத்தை நாம் கணிக்க முடியும். ஆனால் அந்த காலத்திற்கு அப்பாலும் போர் தொடர்ந்தால், உலகில் யாராலும் அதை கணிக்க முடியாது.
எனவே நாம் அனைவரும் இந்த அதிர்ச்சியை ஒன்றாக எதிர்கொள்வோம். நாம் அனைவரும் நம்மைப் பற்றியும் பொதுவாக அனைவரையும் பற்றியும் சிந்தித்து முடிவுகளை எடுக்கவும் நடைமுறைகளை மேற்கொள்ளவும் இதுதான் நேரம் என்று நான் நம்புகிறேன் என்றார்.





