பிரித்தானிய வெளிவிவகார செயலாளருடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு
இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
பொதுநலவாய கற்றல் பேரவையின் 43 ஆவது நிர்வாக சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய இராச்சியத்தின் லண்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 20-05-2026 அன்று ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார செயலாளர் இவெட் கூப்பரை சந்தித்து இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
இதன்போது, ' தித்வா' சூறாவளியினால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகளின் பின்னர், மீள்கட்டுமான மற்றும் மீட்சிப் பணிகளுக்காக ஐக்கிய இராச்சியம் வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புகளுக்கு பிரதமர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு ஐக்கிய இராச்சியம் வழங்கி வரும் பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், இலங்கையின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி, கொள்கை முன்னுரிமைகள், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் அரசாங்கம் கொண்டிருக்கும் கவனம், இலங்கையின் சாதகமான பொருளாதாரப் பயணம் ஆகியன குறித்து ஐக்கிய இராச்சியத்தின் இராஜதந்திரிகளுக்குத் தெளிவுபடுத்தினார்.
அத்தோடு, தற்போதைய உலகளாவிய புவிசார் அரசியல் நகர்வுகள், வலுசக்தித் துறையில் ஏற்பட்டிருக்கின்ற சவால்கள், பிராந்திய தொடர்பாடல் மற்றும் நீண்டகால வலுசக்தி பாதுகாப்பைப் பலப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
மேலும், குடிபெயர்வு கட்டமைப்புகளின் நேர்மை தன்மை, வெளிப்படை தன்மை மற்றும் தொடர்ச்சி ஆகியவற்றை உறுதி செய்யும் அதேவேளை, கல்விசார் நகர்வுக் கட்டமைப்புகளை பலப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இரு தரப்பினரினதும் கவனம் செலுத்தப்பட்டது.
அத்தோடு, இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
இந்நிகழ்வில் ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நிமல் சேனாதீர மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் சிலரும் பிரதமருடன் கலந்துகொண்டனர்.





