வங்காள விரிகுடா ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 'அக்வான்' சூறாவளியாக மாற்றம்
இக்கடற்பகுதிகளில் ஏற்கனவே கடற்றொழில் மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 'அக்வான்' சூறாவளியாக வலுவடைந்ததைத் தொடர்ந்து, அனர்த்த முகாமைத்துவ நிலையம் இயற்கை அனர்த்தங்கள் பற்றிய முன் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, அக்வான் சூறாவளித் தொகுதி, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 17-11-2026 அன்று ஆம் திகதி பிற்பகல் 5:30 மணியளவில் மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பகுதியில் தீவிர சூறாவளியாக வலுவடையும் எதிர்வு கூறப்பட்டது. பின்னர், இத்தொகுதி வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து எதிர்வரும் 19 ஆம் திகதி அதிகாலை 5:30 மணியளவில் மேலும் தீவிர சூறாவளியாக தீவிரமடையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடமேற்கு நோக்கிப் பயணிக்கும் இச்சூறாவளி, நவம்பர் 20 ஆம் திகதி முற்பகல் 11:30 மணியளவில் தீவிர சூறாவளியாக இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் (Yanam) கரையோரங்களில் நெல்லூர் (Nellore) மற்றும் டுனி (Tuni) ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியினூடாகக் கரையைத் தாண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இந்த ஆபத்தான காலநிலை மாற்றம் காரணமாக, வட அகலக்கோடு 05°N முதல் 17°N வரையிலும், கிழக்கு தீர்க்கக்கோடு 80°E முதல் 90°E வரையிலும் இடைப்பட்ட ஆழ்கடல் பிராந்தியங்கள் மற்றும் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரக் கடற்பகுதிகளுக்கும் மறு அறிவித்தல் வரை கடற்றொழில் மற்றும் நாவாய் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்குப் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இக்கடற்பகுதிகளில் ஏற்கனவே கடற்றொழில் மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும், ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் பிற்பகல் 2:00 மணிக்குப் பின்னரான வேளையில் சில இடங்களில் மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலையே நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.





