புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வலுவான சமூகப்பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் - அருண் ஹேமச்சந்திரா
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பதில் அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, 'வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்குச் செல்வது என்பது ஆபத்தானதாக இல்லாமல், சிறந்த வாய்ப்புகளுக்கு வழிகாட்டக்கூடிய ஒரு செயன்முறையாகவே இருக்கவேண்டும்.
பாதுகாப்பான புலம்பெயர்வுப் பாதைகள் மற்றும் ஸ்திரமான பொருளாதாரப் பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப்படவேண்டியது அவசியம் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஏற்பாட்டில் 'புலம்பெயர்வோரைப் பாதுகாத்தல்: தெற்காசிய - மத்திய கிழக்கு புலம்பெயர்வு பாதையில் சமூகப்பாதுகாப்பை மேம்படுத்தல்' எனும் தொனிப்பொருளில் 28-09-2026 அன்று கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
புலம்பெயர் தொழிலாளர்களின் சமூகப்பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் தொழிலாளர் புலம்பெயர்வு பெரும் எண்ணிக்கையில் நடைபெறும் நாடுகள் மற்றும் அவர்கள் புலம்பெயர்ந்து தொழில்செய்யும் நாடுகளின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பதில் அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, 'வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்குச் செல்வது என்பது ஆபத்தானதாக இல்லாமல், சிறந்த வாய்ப்புகளுக்கு வழிகாட்டக்கூடிய ஒரு செயன்முறையாகவே இருக்கவேண்டும். அதற்கமைய புலம்பெயர் தொழிலாளர்கள் பணிக்குச் செல்வதற்கு முன்னரான ஆயத்தக் கட்டத்திலிருந்து ஆட்சேர்ப்பு, பணியில் ஈடுபடல், தாய்நாட்டுக்குத் திரும்புதல், மீண்டும் சமூகத்துடன் இணைதல் வரையான சகல செயன்முறைகளிலும் அவர்களது பாதுகாப்பு உறுதிசெய்யப்படவேண்டும்' எனச் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை பதிவுசெய்வதற்குத் தகுதிவாய்ந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கான மரண இழப்பீட்டுத் தொகையை 2 மில்லியன் ரூபாவாக உயர்த்துதல், பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியச் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சட்ட வரைவைத் தயாரித்தல் என்பன உள்ளடங்கலாக புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.
அதுமாத்திரமன்றி வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அவர்களது வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கு ஏதுவான பொறிமுறையொன்றை நிறுவுவதற்கு தற்போது ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் 'இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான கொள்கையானது வெளிநாடு செல்லும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் மாத்திரம் கவனம்செலுத்தக்கூடாது. மாறாக திறன் மேம்பாடு, சிறந்த தொழில் வாய்ப்புக்கள், பாதுகாப்பானதும் முறையானதுமான வேலைவாய்ப்புச் செயன்முறை, வலுவான தொழிலாளர் பாதுகாப்பு, தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நீண்டகாலப் பொருளாதாரப் பாதுகாப்பு என்பவற்றிலும் கவனம் செலுத்தவேண்டும்' என்றும் அருண் ஹேமச்சந்திரா இதன்போது சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.





