22வது திருத்தம் மதிப்பீடு செய்ய முடியாத அளவிற்கு நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் - பேராசிரியர் ஜீஎல். பீரிஸ்
அந்த 21 திருத்தங்களின் போதும் இதனைச் செய்யவேண்டாம் என நாட்டில் இவ்வளவு பெரிய எதிர்ப்பு அலை உருவானதில்லை.
அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை தன்னிச்சையாக சட்டமாக்குவதன் மூலம் நாட்டிற்கு வரும் முதலீடுகளில் பெரும் சிக்கல் ஏற்படும். இதனால் மதிப்பீடு செய்ய முடியாத அளவிற்கு நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என பேராசிரியர் ஜீஎல். பீரிஸ் தெரிவித்தார்.
பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி 16-09-2026அன்று கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 22வது திருத்தம் என்பது அரசாங்கத்தைத் தவிர இந்நாட்டிலுள்ள அனைவரும் கடுமையாக விமர்சித்த ஒரு திருத்தமாகும். கடந்த காலத்தில் இத்தகையதொரு நிலைமை ஒருபோதும் ஏற்பட்டதில்லை. அரசியலமைப்பு திருத்தப்படுவது இது முதன்முறையல்ல, 21 முறை திருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த 21 திருத்தங்களின் போதும் இதனைச் செய்யவேண்டாம் என நாட்டில் இவ்வளவு பெரிய எதிர்ப்பு அலை உருவானதில்லை.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மத தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து உள்நாட்டு வெளிநாட்டு அமைப்புகள் சிவில் அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் 22ஆம் திருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேநேரம் அரசியலமைப்பின் 22ஆம் திருத்தம் நீதித்துறையின் சுயாதீனத்திற்கு முற்றிலும் பொருத்தமற்ற நடவடிக்கை என குறிப்பிட்டு லாே ஏசியா அமைப்பு மிகவும் கடுமையான அறிக்கையொன்றை இன்று வெளியிட்டுள்ளது.





