உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எச்சரிக்கையை அன்றைய தலைவர்கள் அலட்சியப்படுத்தினர்: பத்தரமுல்ல சீலரத்ன தேரர்
ற்போதைய அரசாங்கத்துக்கும், சட்டத்தை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்து 2017 ஆம் ஆண்டிலேயே நான் எழுத்துப்பூர்வமாக எச்சரித்தும், அன்றைய நாட்டின் தலைவர்களும் பாதுகாப்பு அதிகாரிகளும் அதனை அலட்சியப்படுத்தியதன் விளைவாகவே பெரும் பேரழிவு ஏற்பட்டன ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள ஜனசெத பெரமுன கட்சியின் காரியாலயத்தில் 01-08-2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்: பல வருடங்களாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், உயிரிழந்த ஒவ்வொரு நபருக்காகவும் நீதி கோரி கத்தோலிக்க குருமார்களும் பொதுமக்களும் வீதியில் இறங்கிப் போராடி தமது இலக்கை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தற்போதைய அரசாங்கத்துக்கும், சட்டத்தை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த 2017 ஆம் ஆண்டிலேயே இவ்வாறானதொரு தாக்குதல் நடத்தப்படவுள்ளது என்பது குறித்து எனக்கு தகவல் கிடைத்தது. நான் இங்கிலாந்தில் இருந்து வந்து இது தொடர்பாக அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு நான் எழுத்துப்பூர்வமாக அறிவித்தேன்.
அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், ஊடகவியலாளர் ஒருவருடன் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்துக்குச் சென்று இந்த எச்சரிக்கை கடிதத்தை கையளித்தேன். எமது நாட்டின் தலைவர்கள் விழிப்படைந்து இவ்வாறானதொரு பேரழிவைத் தடுக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாக இருந்தது.
எனினும், அன்றைய ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் செவிடன் காதில் ஊதிய சங்கு போல எமது எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தவில்லை. அன்று எமது எச்சரிக்கைக்கு செவிசாய்த்திருந்தால் இந்த பேரழிவு ஏற்பட்டிருக்காது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இது தான் செய்த பூர்வ ஜென்ம கர்மா என்று உணர்ச்சிவசப்பட்டு கூறுகிறார். இது கர்மா அல்ல, உங்களது கடமையை நீங்கள் சரிவர செய்யாததன் விளைவாகும். மேலதிகாரிகளுக்கு 'ஆம் ஐயா, சரி ஐயா' என்று தலையாட்டுவதை விட்டுவிட்டு, உரிய முறையில் கடமையைச் செய்திருந்தால் இந்த பேரழிவு நடந்திருக்காது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விக்கிரமரத்ன மற்றும் தற்போதைய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் போன்றோரின் செயற்பாடுகள் சந்தேகத்துக்குரியதாகவே உள்ளன. இவ்வாறானவர்கள் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றார்.





