உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணி முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்: ரஞ்சித் மத்தும பண்டார
நல்லாட்சி அரசாங்கத்தின் போதே விசாரணைகள் தொடங்கப்பட்ட போதிலும், 52 நாள் அரசாங்க மாற்றத்திற்குப் பிறகு சட்ட ஒழுங்கு அமைச்சு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ள போதிலும், இத்தாக்குதலைத் திட்டமிட்டவர்கள், நிதியுதவி செய்தவர்கள் மற்றும் இதன் பின்னணியில் இருந்த உண்மையான குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இத்தாக்குதலால் இரு பாராளுமன்றத் தேர்தல்களில் வாக்கு வங்கியை இழந்து அரசியல் ரீதியாகத் தங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளில் இத்தாக்குதலுக்கு ஜே.வி.பி கட்சியுடன் தொடர்புடைய வேட்பாளர் ஒருவர் நிதியுதவி செய்துள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்பினும், தாக்குதலுக்கு நிதியுதவி செய்த இப்ராஹிம் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள் மற்றும் இதன் பின்னணியில் இருந்து பயனடைந்தவர்கள் மீது ஏன் இதுவரை முழுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
இத்தாக்குதலில் கத்தோலிக்க மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம் மக்கள் சந்தேகக் கண் கொண்டு பார்க்கப்பட்டனர். அதேபோல, 2019 மற்றும் 2024 ஆகிய இரு ஜனாதிபதித் தேர்தல்களிலும் தேசிய பாதுகாப்பு என்ற விவகாரத்தை மையப்படுத்தித் எங்களின் வாக்குகள் பெருமளவில் கைநழுவிச் சென்றதால், அரசியல் ரீதியாகத் எங்களுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுத் நாங்களும் இதில் ஒரு பாதிக்கப்பட்ட தரப்பாகவே இருக்கின்றோம்.
நல்லாட்சி அரசாங்கத்தின் போதே விசாரணைகள் தொடங்கப்பட்ட போதிலும், 52 நாள் அரசாங்க மாற்றத்திற்குப் பிறகு சட்ட ஒழுங்கு அமைச்சு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. எனவே, இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியோ பொறுப்பேற்க முடியாது. தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காகவே பொலிஸ் அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதே தவிர, தாக்குதலை நடத்தியவர்கள் இன்னும் முழுமையாகத் தண்டிக்கப்படவில்லை என்றார்.





