கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா
எதிர்வரும் காலங்களில் இந்த தீவு திருவிழாவிற்கு வருகை தரும் மக்கள் தொகையை தாங்குமா என்ற கேள்வி எழுவதாகவும் குறிப்பிட்டார்.
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா 12 ஆயிரத்துக்கும் மேற்படட இலங்கை - இந்திய பக்தர்களின் பங்கேற்புடன் நேற்றைய தினம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.இம்முறை இந்தியாவில் இருந்து சுமார் 3094 பக்தர்கள் திருவிழாவுக்கு வந்திருந்தனர். 27-02-2026 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா நேற்றுக் காலை கூட்டுத் திருப்பலியுடன் நிறைவு பெற்றது.
யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் பேரருட்திரு ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அடிகளார், இந்திய சிவகங்கை மறை மாவட்ட குரு முதல்வர் பேரருட்திரு அருள் ஜோசப் அடிகளார் ஆகியோரின் தலைமையில் இரு நாடுகளினதும் அருட்தந்தையர்கள் பலர் இணைந்து திருவிழா கூட்டுத் திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலி பூசையில் மறையுரையாற்றிய யாழ்.மறைமாவட்ட குரு முதல்வர், மிக விமரிசையாக இந்த திருவிழாவை நடத்துவதற்கு சகல வலிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய அரசாங்கத்திற்கும் இந்திய மக்களின் பங்கேற்புக்காக இந்திய அரசாங்கத்திற்கும் யாழ். மறைமாவட்டத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
கச்சத்தீவு தொடர்பில் இந்திய அரசியல்வாதிகள் முன்னெடுத்து வரும் பிரசாரங்களுக்கு பதிலளிக்கும் வகையில் பூகோள ரீதியில் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது , எனினும் ஆன்மீக ரீதியில் பார்க்கும் போது கச்சத்தீவு அனைவருக்கும் சொந்தமானது என்றார்.
இரண்டு நாட்டு மக்களும் ஒன்றிணைந்து புனித அந்தோனியாரின் திருவிழாவைக் கொண்டாடும் நிலையில் இரு நாடுகளுக்கும் புனித அந்தோனியாரின் ஆசீர்வாதம் அதிகதிகமாக கிடைப்பதாகவும் இருநாட்டு மக்களுக்கும் இடையிலான உறவுகள் மென்மேலும் பலமடைவதாகவும் அவர் தெரிவித்தார்.
இம்முறை எதிர்பாராத விதமாக இந்த திருவிழாவில் அதிகளவிலான மக்கள் கலந்து கொண்டுள்ளதுடன் பன்னிரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்தார். அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கும் மக்கள் தொகையை பார்க்கும் போது எதிர்வரும் காலங்களில் இந்த தீவு திருவிழாவிற்கு வருகை தரும் மக்கள் தொகையை தாங்குமா என்ற கேள்வி எழுவதாகவும் குறிப்பிட்டார்.
முழு உலகமும் தற்போது செயற்கை நுண்ணறிவில் ( ஏ.ஐ) மயங்கியுள்ளது., ஒரு காலத்தில் மனிதன் இந்த உலகில் வெறும் நடமாடும் விலங்குகள் போல் வாழ வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அந்த எதிர்காலம் தொடர்பில் நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பரிசுத்த பாப்பரசர் திருத்தந்தை 14 ஆம் லியோ உலக தொடர்பாடல் தின செய்தியில் மனித ஆற்றலை மண்ணுக்குள் புதைக்கும் நுண்ணறிவாக ஏஐ காணப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார் என்பதைக் குறிப்பிட்ட அருட்தந்தை, கடவுளின் ஞானத்தைப் பற்றி பேசுவதற்கு எமக்கு எந்த அருகதையும் கிடையாது.
திருப்பலி பூசையின் இறுதியில் புனித அந்தோனியாரின் திருச்சுரூப ஆசீர்வாதத்தை வழங்கிய அவர் இருநாட்டுக்கும் இருநாட்டு மக்களுக்கும் இறைவனின் அருள் வேண்டி விசேட மன்றாட்டுக்களையும் ஏறெடுத்தார். திருவிழாவை சிறப்புற நடத்த ஒத்துழைப்பு வழங்கிய அரசாங்கம்,கடற்படை ,இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் ,பாதுகாப்பு தரப்பினர் உட்பட இலங்கை- இந்திய மக்களுக்கு நன்றித் தெரிவித்தார்.
கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர். பிரதம நீதியரசர் பி.பத்மன் சூரசேன வடமாகாண ஆளுநர், என்.வேதநாயகம், மாவட்ட அரசாங்க அதிபர் பிரதீபன் வடக்குக்கான இந்தியத் தூதுவர் தூதுவர் சாய் முரளி, நூற்றுக்கணக்கான யாழ்மறை மாவட்ட அருட்தந்தையர்கள், இந்தியாவில் தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி நூற்றுக்கணக்கான அருட்தந்தையர்களும் திருவிழாவில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.





