"நீலகாமம்" போராட்டத்திற்கு எமது முழுமையான ஆதரவு - சிறீதரன் எம்.பி.
மலையக உறவுகளால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் நாமும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளோம்.
நாம் நீலகாமம்” அறவழிப் போராட்டத்திற்கு எமது முழுமையான பங்களிப்பை வழங்குவோம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
நீலகாமம் மக்களுக்கு நீதி கோரியும், மலையக மக்களுக்கு காணி உரிமை விரைவில் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உள்ளிட்ட மலையகத் தலைமைகளின் ஒருங்கிணைப்பில் கொழும்பில் 05-5-2026 அன்று நடைபெறவுள்ள போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
மலையகம் நீலகாமம் தோட்டத்தில் அட்டூழியக் கூலிப்படையின் மிக மோசமான தாக்குதலால் காயமடைந்தும், தமது சொத்துக்களை இழந்த நிலையிலுமுள்ள எமது மலையக உறவுகளுக்கு நிச்சயம் நாம் துணை நிற்போம் எனவும் "மலையக உறவுகளால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் நாமும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளோம்.
எனவே அத்தகைய கோரிக்கைகளை முன்வைத்து மனோ கணேசன் உள்ளிட்ட மலையகப் பிரதிநிதிகளால் முன்னெடுக்கப்படும் குறித்த போராட்டத்திற்கு எனது முழுமையான ஆதரவினை தருவதாகவும், அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடவேண்டும்" எனவும் தெரிவித்தார்.





