பேரிடர் தடுப்பு திறனை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் ட்ரோன் கருவிகளை வழங்கி வைத்த ஜைகா
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றுக்கு பொருத்தமான தீர்வுகளை வழங்குவதற்கு இந்த தொழிநுட்ப கருவிகள் உதவும்.
2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட சூறாவளியின் தாக்கத்தை தொடர்ந்து “சீரான வீதி போக்குவரத்து திட்டத்துக்கான பேரிடர் தடுப்பு திறனை வலுப்படுத்தும் திட்டம் (2025 – 2026)” என்ற திட்டத்தின் கீழ், தொழிநுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட ட்ரோன் கருவிகளை ஜைகா நிறுவனம் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு 26-02-2026 அன்று உத்தியோக பூர்வமாக கையளித்தது.
ஆபத்தான சரிவுப்பகுதிகளை வான்வழி கண்காணிப்பு செய்தல், அதிக ஆபத்துள்ள வீதிகளை அடையாளம் காணுதல் மற்றும் மண்சரிவைச் சார்ந்த அவசர நடவடிக்கைகளை திட்டமிடுதல் போன்ற பணிகளில், வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர்கள் மற்றும் நிபுணர்களுக்கு உதவும் நோக்கிலேயே இந்த ட்ரோன்கள் கையளிக்கப்பட்டன. இதன் மூலம் இலங்கையின் பேரிடர் எதிர்ப்பு வீதி உட்கட்டமைப்பு முயற்சி வலுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொதுப்பணிப்பாளர் எச்.எச்.என்.எ.ஹெட்டியாராச்சி கருத்து தெரிவிக்கையில்,
கடினமான பகுதிகளில் தகவல்களை சேகரிப்பதற்கும், திட்டமிடல் பணிகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் ஜைகா நிறுவனத்தினால் ட்ரோன் கருவிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
சாதாரண முறையில் சென்றடைய முடியாத, கடினமான இடங்களுக்குச் சென்று துல்லியமான தகவல்களைப் பெறுவதற்கு இவை பயன்படுத்தப்படும். குறிப்பாக பல்வேறு செயற்திட்டங்களுக்கு தேவையான தரவுகளை சேகரிப்பதற்கு இந்த தொழில்நுட்பம் மிகவும் அவசியமாக அமையும்.
மேலும், ஜப்பானிய நிபுணர்கள் இந்த ட்ரோன் கருவிகளை எவ்வாறு இயக்குவது மற்றும் அவற்றிலிருந்து பெறப்படும் தரவுகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பயிற்சிகளையும் எமக்கு வழங்கியுள்ளனர். மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றுக்கு பொருத்தமான தீர்வுகளை வழங்குவதற்கு இந்த தொழிநுட்ப கருவிகள் உதவும்.
இதற்கு முன்னர் இத்தகைய தொழிநுட்ப வசதிகள் மிகவும் குறைவாகவே காணப்பட்ட போதும், தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த ட்ரோன் வசதியின் மூலம் பணிகளை முன்னரை விட அதிக செயற்திறனுடனும், விரைவாகவும் முன்னெடுக்க முடியும் என எதிர்பார்க்கிறோம்.
இதன்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் டி.பி.பாஸ்கரன் ஜைகா நிறுவனம் தொடர்ந்து வழங்கி வரும் இவ்வாறான மனிதாபிமான மற்றும் தொழில்நுட்ப ரீதியான பங்களிப்புக்கும் ஆதரவுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.





