சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு ஆதரவாகவுள்ளது: ஆசிய பசிபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன்
நாணய நிதியத் திட்டத்தின் முன்னேற்றங்களை பார்வையிடவும், உங்களுடனான எமது ஒற்றுமையை வெளிப்படுத்தவும் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் என்றும் இலங்கைக்கு ஆதரவாக இருக்கும். இலங்கையுடனான ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்காகவே எமது குழு இங்கு விஜயம் செய்துள்ளது. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்பதையும், எமது முழுமையான ஆதரவு உங்களுக்கு உண்டு என்பதையும் நான் கூற விரும்புகிறேன். இதனை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்த மாதம் எமது முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா நாட்டுக்கு வரவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட நாணய நிதியப் பிரதிநிதிகள் குழு 28-01-2026அன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தது. ஜனாதிபதியுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து வெளியிட்ட கிருஷ்ணா ஸ்ரீனிவாசன், நான் இலங்கைக்கு நான்கு சந்தர்ப்பங்களில் விஜயம் செய்துள்ளேன். இது எனது நான்காவது விஜயமாகும். இந்த விஜயத்தில் தான் முதன்முறையாக கொழும்பிற்கு வெளியே இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு இரண்டு நாட்கள் சென்றிருந்தேன். கொழும்பிற்கு வெளியேயான எனது அந்த பயணத்திலிருந்து மூன்று விடயங்களை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
முதலாவதாக, இது மிகவும் அழகான நாடு, அத்துடன் சாதனை படைப்பதற்கான மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது. இரண்டாவதாக, இயற்கை அனர்த்தத்தின் பாதிப்புகளை நான் நேரடியாகப் பார்வையிட்டேன். பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருப்பதையும், வீதிகள் சேதமடைந்து புனரமைக்கப்பட வேண்டிய நிலையில் இருப்பதையும் நான் அவதானித்தேன்.
உயிரிழந்தவர்களுக்காகவும், இந்த அனர்த்தத்தின் பாதிப்புகளுக்காகவும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை உங்களுக்கும் இலங்கை மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். மூன்றாவதாக, மக்களுடன் பேசியபோது, அரசாங்கம் மக்களுக்காகச் செய்துள்ள விடயங்கள், குறிப்பாக ஆட்சி சீர்திருத்தங்கள் தொடர்பில் பெரும் வரவேற்பு நிலவுவதை உணர முடிந்தது. இந்த மூன்று விடயங்களையும் நான் உங்களிடம் தெரிவிக்க விரும்பினேன். ஏனெனில், வழக்கமாக நாம் கொழும்புக்கு வந்து கூட்டங்களில் பங்கேற்றுவிட்டுச் சென்றுவிடுவோம். ஆனால் இம்முறை முதன்முறையாக வெளியில் சென்று பல விடயங்களை நேரில் பார்வையிடக் கூடியதாக இருந்தது.
எமது குழுவினர் இங்கிருக்கின்றனர். அவர்கள் அதிகாரிகளுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்பதையும், எமது முழுமையான ஆதரவு உங்களுக்கு உண்டு என்பதையும் நான் கூற விரும்புகிறேன். எமது முகாமைத்துவப் பணிப்பாளர் அடுத்த மாதம் கொழும்புக்கு வரவுள்ளார். அவர் நாணய நிதியத் திட்டத்தின் முன்னேற்றங்களை பார்வையிடவும், உங்களுடனான எமது ஒற்றுமையை வெளிப்படுத்தவும் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
எமக்கு இது சற்றே வித்தியாசமான ஒரு பயணமாகும். இது இப்பிராந்தியத்திலுள்ள எமது அனைத்துப் பிரதிநிதிகளின் ஒரு சந்திப்பாகும். பல மாதங்களுக்கு முன்பே இந்தச் சந்திப்பை நாங்கள் திட்டமிட்டிருந்தோம். அனர்த்தம் ஏற்பட்டபோது, இதை இரத்து செய்யலாமா எனக் கேட்டனர். ஆனால் நாம் பயணத்தை இரத்து செய்ய விரும்பவில்லை. இலங்கை மக்களுடனான எமது ஒற்றுமையை வெளிப்படுத்தவே நாங்கள் விரும்புகிறோம் என்றார்.





