78ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு - 2000 பேருக்கு அழைப்பு
கடந்த ஆண்டு 70 மில்லியன் ரூபாவுக்குள் இந்த பிரதான நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இலங்கையின் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதான கொண்டாட்ட நிகழ்வுகள் பெப்ரவரி 4ஆம் திகதி 'இலங்கையைக் கட்டியெழுப்புவோம்' எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயாக்க தலைமையில் கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது. காலை 6.30 மணிக்கு உத்தியோகபூர்வமாக நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளதாக பொது நிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சிச் செயலாளர் எஸ்.ஆலோக பண்டார தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 29-01-2026 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த ஆண்டு 70 மில்லியன் ரூபாவுக்குள் இந்த பிரதான நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இவ்வாண்டு இதற்காக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், செலவுகளை 60 - 70 மில்லியன் ரூபாவுக்குள் மட்டுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அதற்கமைய இம்முறை சுதந்திர தின கொண்டாட்டங்களில் சுமார் 2000 பங்கேற்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை இம்முறை முப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் 3323 பேரின் பங்கேற்புடன் மரியாதை அணிவகுப்புகள் இடம்பெறவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற எயா வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்தார். அதற்கமைய 1962 இராணுவ வீரர்களும், 693 கடற்படை வீரர்களும், 583 விமானப்படை வீரர்களும், 83 சிவில் பாதுகாப்பு படை வீரர்களும், 500 மாணவர் படையணியினரும், 600 பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரும் மரியாதை அணிவகுப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்தார்.
சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் அதற்கான ஒத்திகைகளை முன்னிட்டு சுதந்திர சதுக்க வளாகத்தில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். அதற்கமைய இன்றிலிருந்து பெப்ரவரி 2ஆம் திகதி வரை ஒத்திகைகள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.





