புத்தாண்டு கால இணையவழி மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இணையவழி ஊடாக நிதி மோசடி மற்றும் தரவுத் தகவல் திருட்டில் ஈடுபடும் மோசடிகாரர்கள், பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் மக்களின் பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் அபாயம் காணப்படுவதாக பொலிஸாரால் அவதானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டுப் பரிசில்கள் மற்றும் சலுகைகள் வழங்குவதாகத் தெரிவித்துச் சமூக வலைத்தளங்களின் ஊடாகப் பகிரப்படும் விளம்பரங்கள் மற்றும் இணைய இணைப்புகளை அனுகுவதன் மூலம் மோசடிக்காரர்கள் தனிப்பட்ட தகவல்களைத் திருடி, பணத்தைச் சூறையாடும் வாய்ப்புள்ளதால் எனவே, பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில், பொதுமக்கள் பொருட்கொள்வனவு மற்றும் கட்டணங்களைச் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியத் தேவைகளுக்காக இணையத்தளங்களைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இணையவழி ஊடாக நிதி மோசடி மற்றும் தரவுத் தகவல் திருட்டில் ஈடுபடும் மோசடிகாரர்கள், பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் மக்களின் பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் அபாயம் காணப்படுவதாக பொலிஸாரால் அவதானிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை மற்றும் உடனடி பண இலாபத்தை எதிர்பார்க்கும் நோக்கில், சில குழுவினர் இவ்வாறான மோசடி வலைகளில் சிக்கிக்கொள்ளக்கூடிய வாய்ப்புள்ளது. அண்மைக்காலமாக இவ்வாறான மோசடிகள் குறித்துப் பொலிஸ் நிலையங்கள் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளும் அதிகரித்துள்ளன. சமூகவளைத்தங்களில் பகிரப்படும் விளம்பரங்கள் மற்றும் இணைப்புகள், புத்தாண்டு சலுகைகள், அன்பளிப்புகள், போலியான வர்த்தக இணையத்தளங்கள் மற்றும் வங்கி இணையத்தளங்கள் ஆகியவற்றின் ஊடாக மோசடிக்காரர்கள் பொதுமக்களின் தகவல்களை நுணுக்கமான முறையில் திருடுகின்றனர்.
அதற்கும் மேலதிகமாக, தற்போது வங்கிச் செயலிகளைப் புதுப்பிக்குமாறு கோரும் போலியான செய்திகள், போலியான கிவ்.ஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்யத் தூண்டுதல், மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி ஊடான மோசடிகள் மற்றும் அழைப்பாளர் அடையாளத்தை மாற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட உத்திகளைக் கையாண்டு இவ்வாறான குழுக்கள் பொதுமக்களை ஏமாற்றி வருகின்றன.
அதுமாத்திரமின்றி மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட உயர் அரச அதிகாரிகள் மற்றும் பிரபலங்களின் உருவப்படங்களைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி இவ்வாறான மோசடிகள் முன்னெடுக்கப்படலாம். இதன் ஊடாகத் தனிப்பட்ட தரவுகளைத் திருடி, இலக்கு வைக்கப்பட்ட மோசடித் தாக்குதல்கள் மற்றும் அடையாளத் திருட்டுகளை முகந்தெரியாத குழுவினர் மேற்கொள்கின்றனர். ஆகையால் இணையவழி ஊடாகப் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் போது மிகவும் அவதானத்துடனும் விழிப்புணர்வுடனும் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.





