முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார பிணையில் விடுதலை: வெளிநாடு செல்லவும் தடை
சந்தேகநபர் நேற்றைய தினம் விசாரணை அதிகாரிகளால் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட தேங்காய் அபிவிருத்தி மற்றும் பெருந்தோட்ட அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவை தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் 08-07-2026 அன்று உத்தரவிட்டது.
அதற்கமைய சந்தேகநபரை 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப்பிணைகளின் கீழ் விடுவித்த நீதிவான் வெளிநாடு செல்லவும் பணத்தடை விதித்திருந்தார்.
மேற்படி வழக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவர் இவ்வாறு உத்தரவிட்டார்.
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று (8) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை தந்த போதே, நீண்ட நேர விசாரணைகளின் பின்னர் அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவை கைது செய்திருந்தனர். சந்தேகநபர் நேற்றைய தினம் விசாரணை அதிகாரிகளால் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
இதன்போது மன்றில் விடயங்களை முன்வைத்த விசாரணை அதிகாரிகள், 2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த போது, அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தும் 250 ஆயிரம் சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்களை அச்சிடுமாறு சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்துக்கும் குருநாகல் பெருந்தோட்ட நிறுவனத்துக்கும் பணித்ததன் மூலம், குறித்த இரு நிறுவனங்களுக்கும் 2,665,000 ரூபா நட்டத்தை ஏற்படுத்தியமையே சந்தேகநபருக்கு எதிரான முதலாவது குற்றச்சாட்டு என நீதிமன்றில் தெரிவித்தனர்.





